tamilnadu

img

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 2025 ஜனவரியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025இன் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் - 3,07,90,791 பேரும், பெண்கள் - 3,19,30,833 பேரும், மாற்று பாலினத்தவர் - 8,964 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே அதிக் வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. அத்தொகுதியில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல், குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 1 லட்சத்து 73 ஆயிரத்து 230 வாக்காளர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளுர் தொகுதி உள்ளது.

வரும் நவம்பர் 16, 17, 23, 24 ஆகிய நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம். அதேபோல் 2025 ஜனவரியில் 18 வயதை எட்ட உள்ளவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யவும், திருத்தம் செய்யவும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.