சென்னை:
பேரவைத் தலைவரை சந்தித்து விளக்கக் கடிதம் கொடுப்பேன் என்று கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபு கூறியுள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேரும் டி.டி. வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி விளக்கம் கேட்டு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீசு அனுப்பியிருந்தார்.இதில் ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் உச்சநீதிமன்றத்துக்கு சென்று பேரவைத் தலைவர் நடவடிக்கைக்குத் தடை கோரி வழக்கு தொடர்ந்தனர். ஆனால், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை.
இதுபற்றி பிரபு கூறியதாவது:-
சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தின சபாபதியும், கலைச்செல்வனும் யார் கொடுத்த யோசனையில் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித் தாலும் அது எனக்கும் பொருந்தும். நான் அதிமுக-வில் இருப்பதால் என் மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என நம்புகிறேன். ஆட்சிக்கு எதிராக நான் செயல்பட வில்லை.
திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை பேரவைத் தலைவரை சந்தித்து விளக்கக் கடிதம் கொடுக்க இருக்கிறேன். அதிமுக கட்சிக்கு விரோதமாகச் செயல் படமாட்டேன். இதற்கு பிறகும் பேரவைத் தலைவர் என் மீது நடவடிக்கை எடுத்தால் அது அதிமுக-வுக்குதான் இழப்பாகும். காலம்தான் பதில் சொல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.