சென்னை:
சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற் பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகளை இயக்க, தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையைபரிசீலித்த அரசு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் எல்லைக்குட்படாத தொழிற்பேட்டைகள் அதாவது சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கிண்டி அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகளும் திங்கட்கிழமை முதல் மே 25 ஆம் தேதி முதல், அந்த பகுதிகளிலேயே உள்ள 25 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படலாம். ஆனால் தடை செய்யப்பட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு அனுமதி இல்லை.
பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் தினமும் தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். தினமும் இரு முறை தொழிற்சாலையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தனிநபர் இடைவெளி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு பணியில் இருந்து விடுப்பு அளிக்க வேண்டும். சோப்பு மற்றும் கிருமி நாசினி உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். போதுமான கிருமி நாசினிகளை பயன்படுத்தும் போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பணியாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்க அரசால் தனியாக வெளியிடப் பட்டுள்ள நிலையான செயல் பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.