tamilnadu

ஒருமாத பரோலில் வெளிவந்த பேரறிவாளன்...

சென்னை;
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் 30 நாள்கள் பரோலில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப் பட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பரோல் கோரி, அவரது தாயாா் அற்புதம்மாள் முதல்வரிடம் கோரியிருந்தார். இதையடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பரோல் வழங்க பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிய விதிகளைத் தளர்த்தி 30 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட்டார். 

அதன்படி, வெள்ளிக்கிழமை சென்னை புழல் சிறையில் இருந்து, வேலூர் மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன், அங்கிருந்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு பலத்த காவல் பாதுகாப்புடன் அழைத்து செல்லப் பட்டார்.ஏற்கெனவே இரு முறை பரோலில் வந்த பேரறிவாளன் தற்போது மூன்றாவது முறையாக 30 நாள்கள் பரோலில் வந்துள்ளார். தற்போது கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு காரணமாக பேரறிவாளனைக் காண வெளியாட்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரோலில் உள்ள பேரறிவாளன் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது, கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட சிறை விதிகளுக்குட்பட்டு நடக்க வேண்டும் என்ற விதியின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.