சென்னை:
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தைகூட அறியாத மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016 அமலில் உள்ளது. இச்சட்டப்படி தகுதியான அரசு அலுவலர் மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்று அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் சான்று நாடு முழுவதும் செல்லத்தக்கது (The certificate of disability issued under this section shall be valid across the country)என இச்சட்டப் பிரிவு 58(3) தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையோ, மாவட்டம் விட்டு மாவட்டம் புலம் பெயர்ந்தால்கூட, அடையாள சான்றை ரத்து செய்து வருகிறது. “அடையாள சான்றை ரத்து செய்து சான்றளித்தல்” என தனி படிவத்தையே இதற்காக நடைமுறைப்படுத்தி வருகிறது. இது, மாற்றுத்திறனாளிகளின் சட்ட உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய மாற்றுத்திறனாளிகள் துறையே மாற்றுத்திறனாளிகளை தேவை இல்லாமல் அவதிக்குள்ளாக்குவது அதிர்ச்சி அளிக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்(2016)ன்படியான உரிமைகளை நிலைநாட்ட, மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டு அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளே, சட்ட உரிமைகளை அறியாமல், தேவை இல்லாமல் அலைக் கழித்து வருவதையே, இச் செயல்பாடு தெளிவுபடுத்துகிறது.எனவே, மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் இம் மாதிரியான சட்ட விரோத நடவடிக்கைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கைவிட நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து மட்ட துறை அதிகாரிகளுக்கும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்(2016) குறித்து உரிய பயிற்சிகள் அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க தமிழக முதல்வரை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்திக் கோருகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.