சென்னை:
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழுகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநிலத்தலைவர் ஏ.லாசர் தலைமையில் இணைய வழியில் நடைபெற்றது. அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன், பொதுச் செயலாளர் பி.வெங்கட் ஆகியோர்கலந்து கொண்டு தேசிய நிலைமைகளையும், எதிர்கால பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
முந்தைய அதிமுக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை தனதுஅரசியல் சுயலாபத்திற்காகவும், முறைகேடாகவும் பயன்படுத்தியது. அதனால் கடந்த10 ஆண்டு காலத்தில் திட்டம் சரிவர செயல்படுத்தாமல் சிதைக்கப்பட்டது. திட்டத்தின் முழு நோக்கமும் - பலன்களும் முழுமையாக மக்களுக்குச் சென்றடையவில்லை. தனது ஆட்சியின் இறுதி காலத்திலும் கொரோனா பரவலை காரணம் காட்டி வேலையை முழுமையாக நிறுத்தியும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலையை மறுத்தும் அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பை கையில் வைத்துக்கொண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊராட்சிகளில்வேலை நிறுத்தப்பட்டு உள்ளதுடன், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலையை மறுக்கும் நிலையும் நீடிக்கிறது. திமுகவும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கிராமப்புற மக்களுக்கு வேலை அளித்து வறுமையை ஒழிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுநிறைவேற்றிட இத்திட்டத்தை பாஜக அரசும் சிதைப்பதிலேயே குறியாக உள்ளது.
ஆகவே, மாநில அரசும், ஊரக வளர்ச்சித்துறையும் உடன் தலையிட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் முழு அளவில் ஊரக வேலைத் திட்டத்தை செயல்படுத்திட ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், 55 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா கால விதிகளைப் பின்பற்றிவேலை வழங்கிட வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அவர்களுக்கு மாதம்ரூ.3000 நிவாரணம் வழங்கிடவும் வேண்டுமென அரசை வலியுறுத்துகிறோம்.பொது விநியோகத்திட்டத்தின் மூலம் 14 பொருள்களை சேர்த்து வழங்கிடும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளதை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வரவேற்கிறது. தற்போது அறிவிக்கப்பட்ட பொருள்களை குறைந்தபட்சம் மேலும் இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும், சமையல் எண்ணெய் சேர்த்து வழங்கிடவும் வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
மின் கணக்கீடு சரிவர செய்யாமல் கட்டணம் செலுத்த வலியுறுத்தப்படுவதாக தகவல்கள் கிடைக்கிறது. இதனால் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்பந்தமும், சிரமங்களும் ஏற்படுகிறது. ஆகவே கேரளஅரசைப் போல மின் கட்டணம் 2 மாதங்களில் சேர்த்து செலுத்திடவும், முறையான மின்கட்டண கணக்கீட்டை எடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும்.குறுவை சாகுபடிக்கு கடந்த ஜூன் 12அன்று மேட்டூரில் இருந்து முதலமைச்சரால் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அஇவிதொச வரவேற்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏறக்குறைய 80 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய வருமானத்தைச் சார்ந்தே வாழ்கின்றனர். ஆகவே மாநில அரசு விவசாய வேலைகளுக்கான குறைந்த பட்சக்கூலியை ஆண்களுக்கு 6 மணி நேரத்திற்கு ரூ.600 ஆகவும், பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு 4 மணி நேரத்திற்கு ரூ.400 ஆகவும் உயர்த்தி அறிவிக்க வேண்டும்.மேலும் அரசு அறிவித்துள்ள ஊரக வேலைத்திட்ட நாள்களை 150 நாள்களாக உயர்த்தும் திட்டத்தை துவங்கிட வேண்டும், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ளவிவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் திட்டத்தையும், கொரோனா கால நிவாரண நிதியாக வரி செலுத்தாத ஏழை குடும்பங்களுக்கு மாதத்திற்கு ரூ.7500 நிவாரணம் வழங்கிடவும் மத்திய அரசை வலியுறுத்திடவும் வேண்டும்.இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலக்குழு கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர், மாநில துணைத் தலைவர் பி.வசந்தாமணி உள்ளிட்டமாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.