சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக் கிழமை காலை திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றார். தில்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.அப்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடர்பான பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.மோடியை சந்தித்து பேசிய பிறகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமித்ஷாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது பல்வேறு முக்கிய முடிவுகள் இரு தரப்பினரும் எடுக்க வாய்ப்பு இருப்பதாக தில்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலின்போது அ.தி.மு.க. 66 இடங்களை கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாத நிலையில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி என அதிமுக இருகோஷ்டிகளாக பிளவுபட்டு கிடக்கிறது.ஆனால் திடீரென அ.தி.மு.க.வை கைப்பற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களிடம் அவர் தொலைபேசியில் பேசி வருகிறார். இதனால் அ.தி.மு.க.வில் தேவையில்லாத சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தில்லி அரசியல் தொடர்புடன் ஓ.பன்னீர்செல்வம் காய்களை நகர்த்துவதாக தெரிகிறது.பிரதமர் மோடியை திங்கட்கிழமை(ஜூலை 26) காலை 10.15 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க கூடும் என்று தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.