சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1.5 லட்சம் பால் முகவர்களும் மார்ச் 22 அன்று காலை 7 மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப்போவதில்லை என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட மக்களை தன்னார்வத்தோடு தனிமைப்படுத்திட மத்திய அரசு எடுக்கும் நல்லெண்ண நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1.5 லட்சம் பால் முகவர்களும் மார்ச் 22 அன்று காலை 7.00 மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப்போவதில்லை என்கிற முடிவை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அத்தியாவசிய உணவுப்பொருளாக விளங்கும் பால் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைத்திட ஏதுவாக தமிழகம் முழுவதும் 21 ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை, மாலை என இருவேளைகளில் கூடுதலாக பால் கொள்முதல் செய்து அன்றைய தினம் இரவு கூடுதல் நேரமும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பால் விநியோகம் செய்திடும் பணியை பால் முகவர்கள் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.