தற்கொலை படை தாக்குதல் : பாக்-இல் 3 பேர் கைது
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் பிப்.6 வெள்ளியன்று தொழுகையின் போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரமான தாக்குதலில் 60 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சுமார் 169 பேர் படு காயமடைந்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் ஷியா சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இது தொடர்பாக கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பெஷாவரில் ஒரு பெண் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சூடானில் டிரோன் தாக்குதல் : 8 குழந்தைகள் கொலை
சூடானில் துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 8 குழந்தை கள் உட்பட 24 பேர்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் வடக்கு கோர்டோஃபான் மாகாணத்தில் ரஹாத் நகரில்இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 2023 முதல்அந்நாட்டு ராணுவமும் துணை ராணுவமும் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டுள்ளன. மேலும் துணை ராணுவம் நாட்டின் பல பகுதிகளில் படுகொலைகளை அரங்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன்-ரஷ்ய போர் ஜூனுக்குள் முடிவுக்கு வர அமெ., விருப்பம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை ஜூன் மாதத்திற்குள் முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா விரும்புவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் நடத்த அமெரிக்கா முன் வந்துள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனை தவிர்த்து விட்டு, ரஷ்யாவுடன் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் அமெரிக்கா மேற்கொள்வதை ஏற்க முடியாது என்றும் எங்களைப் பற்றிய ஒப்பந்தங்களை, எங்களை இணைக்காமல் அமெரிக்காவும் ரஷ்யாவும் மேற்கொள்வதை உக்ரைன் ஏற்காது எனவும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரம் : பில் கிளிண்டன் சவால்
கொடூர பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனின் வழக்கு ஆவணத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகள் கிளிண்டன் அறக்கட்டளை சார்ந்த மனிதாபிமானப் பணிகளுக்காக இருந்தது. அவரது தீவுக்கு நான் சென்றதில்லை. இது குறித்த விசாரணையை பொதுவெளியில் நடத்த வேண்டும் என்று பில் கிளிண்டன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குடியரசு கட்சி இந்த விவகாரத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாகவும் தனக்கே நியாயம் கூறிக்கொண்டார்.
நிபா வைரஸ் பாதிப்பு : ஆசியா முழுவதும் கண்காணிப்பு
இந்தியாவில் இரண்டு நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டது. தற்போது வங்கதேசத்திலும் இந்த மரணம் நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது. ஜனவரி 21 அன்று 40 வயது பெண் ஒருவ ருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, வலிப்பு போன்ற தீவிர அறிகுறிகள் தோன்றிய ஒரு வாரத்தில் அவர் உயிரிழந்தார். மறுநாள் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆசியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
