tamilnadu

img

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: சென்னை மாணவர் கைது

சென்னை:
நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.நீட் தேர்வில் முறைகேடு செய்து தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தது தெரிய வந்தது. தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் உதித்சூர்யாவே இந்த விவகாரத்தில் முதலில் சிக்கினார். அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் எழுதிய கடிதமே நீட் தேர்வு முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சுமார் 20 பேரை கைது செய்தனர்.

நீட் தேர்வு முறைகேட்டில் பெற்றோர்களே முழுமையாக ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டது. தங்களது பிள்ளைகளை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசையில் குறுக்கு வழிகளை அவர்கள் தேர்வு செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.நீட் தேர்வை எழுதுவதற்காக வெளி மாநிலங்களை மாணவர்கள் திட்டமிட்டு தேர்வு செய்ததும் அங்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்த மற்ற மாணவர்களை வைத்தே ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த சில மாதங்களாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இருப்பினும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது யார்-யார் என்பதை சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. மோசடியாக நீட் தேர்வை எழுதியவர்களின் புகைப்படங்கள் மட்டுமே போலீசாருக்கு கிடைத்துள்ளது.இதையடுத்து கடந்த 11-ந்தேதி நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த 2 மாணவிகள் உள்பட 10 பேரின் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டனர். அவர்களை கண்டுபிடிக்க வெளிமாநிலங்களில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.இந்த நிலையில் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தபிறகு அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் படித்து வரும் மாணவர்கள் பற்றிய முழு தகவல்களையும் முழுமையாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுபோன்று நடத்தப்பட்ட ஆய்வில்தான் மாணவர் தனுஷ்குமார் சிக்கி உள்ளார்.மாணவர் தனுஷ்குமார் பீகாரில் உள்ள நீட்தேர்வு மையத்தை தேர்வு செய்து இந்தி மொழியை தேர்ந்தெடுத்து அதில் முதல் 50 இடங்களுக்குள் வெற்றி பெற்றது தெரிய வந்தது. அதே நேரத்தில் நீட் தேர்வு மையத்தில் ஒட்டப்பட்டு இருந்த புகைப்படம் வேறு மாதிரியாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம் இதுபற்றி நடத்திய விசாரணையில் மாணவர் தனுஷ் குமாருக்கு இந்தி தெரியாது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாணவர் தனுஷ்குமாரிடம் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத் தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது 2018-2019-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தனுஷ்குமார் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது.செவ்வாய்க்கிழமை முதல் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்குப் பிறகு இன்று காலையில் தனுஷ் குமார் கைது செய்யப்பட்டார். இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். டாக்டர் படிப்பில் சேர்ந்து 2 ஆண்டுகள் படித்து முடித்த பிறகே மாணவர் தனுஷ்குமாரின் மோசடி வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது.இதற்கிடையே நீட் தேர்வு முறைகேட்டில் தனுஷ்குமார் ஈடுபடுவதற்கு அவரது தந்தை தேவேந்திரனும் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. ஆள் மாறாட்டம் மூலம் பரீட்சை எழுதுவதற்காக லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து இருப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேவேந்திரனும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.