tamilnadu

img

அனைத்து மாவட்ட மையங்களிலும் சித்த மருத்துவ அலுவலகம் உருவாக்க கோரிக்கை.....

சென்னை:
தமிழகத்தில் உள்ள ஆயுஷ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தற்போது உள்ள சம்பள வழங்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும், மேலும் புதிய மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்ட மையங்களிலும் சித்த மருத்துவ அலுவலகம் உருவாக்க வேண்டும் என்றும் இதுவே சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கடைக்கோடி மக்கள் வரை பயன் பெற வழிவகுக்கும் என்றும்  கோரிக்கை  எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் இயங்கி வருகின்ற சித்தமருத்துவ பிரிவுகளுக்கு அந்தந்த இடத்திலேயே ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவருக்கும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என அத்துறையின் ஆணையர் திடீர் என தன்னிச்சையாக ஊதிய சுற்றறிக்கை ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.வட்டார அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகத்திடம் இருந்துதான் தற்போது வரையில் இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது, தற்போது வரையில் இந்த அரசாணை செயல்பட்டு வருகிறது.
தகுந்த முறையில் அரசாணைகள் இருக்கும் நிலையில் அரசின் அனுமதி-ஒப்புதல் கடிதம் இல்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு இத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அத்துறை மட்டுமல்லாது கருவூலத்துறையினரும்  குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம்  38  மாவட்டங்கள் உள்ள நிலையில் 22 மாவட்டங்களில் மட்டும் சித்த மருத்துவ, மாவட்ட அலுவலகம் உள்ளது. மேலும் 16 மாவட்டங்களுக்கு இதுநாள் வரையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் ஏற்படுத்தப்படவில்லை.
தற்போது ஒரு  மாவட்ட சித்த மருத்துவர் அலுவலர்- 4 மாவட்டம், 3 மாவட்டம், 2 மாவட்டங்கள் என வேலைப் பணிகளை செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நான்கு மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு அலுவலகத்தில் போதுமான அமைச்சுப் பணியாளர்கள் இல்லாத நிலையில் மிகக்குறைவான மனித வளத்துடன் செயல்படும் அமைச்சுப் பணியாளர்களை கொண்டு எவ்வாறு இது சாத்தியமாகும். மேலும் இதுபோன்ற சிக்கல்களை ஆணையரிடம் எடுத்துக் கூற முடியாத சூழலில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்களும் உரிய காலத்தில் சம்பளம் கிடைக்குமா? என்ற வினாவில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். தற்போது உள்ள குறைந்தபட்ச ஊழியர்கள் மேலும் எவ்வாறு இந்த வேலைப்பளுவை சுமையை சுமப்பது என்ற கேள்விக்குறியுடன் அமைச்சு பணியாளர்கள் மனக் கலக்கத்தில் உள்ளனர். 

தற்போது தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பட்ஜெட்டில் புதிய சித்த மருத்துவக்  கல்லூரிகள் உள்ளிட்ட மேலும் பல்வேறு திட்டங்களை அரசு வகுத்து வரும் நிலையில் தேவையின்றி புதிய நடைமுறை பல்வேறு சிக்கல்களையும், ஊழியர்கள் மத்தியில் பல்வேறு மன சஞ்சலங்களையும் ஏற்படுத்தும். ஆகவே   ஊழியர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ள வட்டார அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் ,ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும், தமிழகத்தில் புதிதாக பல மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை மாவட்ட சித்த மருத்துவமனை இல்லாமல் ஏற்கனவே இருந்த மாவட்டத்துடன் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.ஆகவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் முதல் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவமனைக்கு தனியாக தலைமை அலுவலகம் உருவாக்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் இத்துறை அமைச்சருக்கும், இத்துறை செயலாளர் ஆகியோருக்கும்  கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.