tamilnadu

img

சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ்.... முதல்வருக்கு பாராட்டு....

சென்னை:
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தை திருத்தியமைத்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதன்தலைவராக எஸ். பீட்டர்அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக்காக்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு, கடந்த 2010ஆம் ஆண்டு, மீண்டும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010-இன்படி, சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மை யினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த  ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்திருத்தியமைத்து, அதன் தலைவராக எஸ். பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார். 

மக்கள் ஒற்றுமை மேடை- சிறுபான்மை நலக்குழு வாழ்த்து!
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட் டதற்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமைமேடையும், சிறுபான்மையினர் நலக்குழுவும் வாழ்த்து தெரிவித்துள்ளது.தமிழ்நாடு காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான, நமது  அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய பீட்டர் அல்போன்ஸை,  தமிழக அரசு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமித்து உத்தரவு பிறப்பித்து வந்துள்ள செய்தி “செவியில் தேன் ஊட்டுவதாக”  உள்ளது.கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் பல்வேறு பதவிகளை வகித்தவர் பீட்டர் அல்போன்ஸ். தமிழக மக்களுக்கும்,  சிறுபான்மை மக்களுக்கும் அவர் ஆற்றியுள்ள பணிகள் மிகவும் சிறப்பானது. திமுக தலைமையிலான தமிழக அரசு பீட்டர் அல்போன்ஸை இந்த பொறுப்பிற்கு  நியமித்துள்ளது அனைத்து வகையிலும் சாலப் பொருந்தக்கூடிய சிறந்த தேர்வு என்பதால் திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பாராட்டுவது பொருத்தமானதாகும்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் வழிகாட்டியாக  மேடையில் இணைந்து  பீட்டர் அல்போன்ஸ் பல ஆண்டுகள் சேவை புரிந்துள்ளதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட  வேண்டியுள்ளது. தமிழக மக்களுக்கும் குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கும் பீட்டர் அல்போன்ஸ் மிகச் சிறந்த சேவையைஆற்றுவார் என்பது திண்ணம் என்பதால் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், அவரது பணி சிறக்கவும், சிறுபான்மை மக்கள் வாழ்வில் மேன்மையடையவும் வழி வகுக்கும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், உதயகுமார், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.