சென்னை, ஜூன் 3-அறப்போர் இயக்கத்திடமிருந்து ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அமைச்சர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கி, அதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. இதுகுறித்து அந்த இயக்கத் தின் நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியும் கொடுத்தனர். தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்ப அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் வேலுமணி சார்பில் மனு தாக்கல் செய் யப்பட்டது.அந்த மனுவில், அறப்போர் இயக்கத்திடமிருந்து ரூ.1 கோடி இழப்பீடும் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி ஆர்.சுப்பிர மணியன் விசாரித்தார். இருதரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.விடுமுறை காலம் முடிந்து திங்களன்று(ஜூன் 3) உயர்நீதிமன்றப் பணிகள் தொடங்கியதும், அமைச்சர் தொடர்ந்த இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பித்தார்.அறப்போர் இயக்கத்துக்கு எதிராக அமைச்சர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், அமைச்சருக்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க அந்த இயக்கத் துக்கு உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.