சென்னை:
தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் பணியாற்று ஊழியர்களுக்கு ஏப்ரல், மே மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உறுதியளித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெள்ளியன்று (மே 22) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். கொரோனா நிவாரணப் பணிகளில் மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து விளக்கினர்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் குறித்து விரிவான மனுவை தலைமைச் செயலாளரிடம் கொடுத்து விவாதித்தோம். மனுவில் உள்ள ஒவ்வொரு அம்சம் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை விவரித்தார். சில கோரிக்கைகளை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதாக கூறினார்.சென்னை ஹாட்ஸ்பாட்டாக உள்ள நிலையில் தனியார் மருத்துவக்கல்லுரி, மருத்துவமனைகளை கொரோனா மையமாக மாற்ற வேண்டும். அரசு தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு சரியில்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறினோம்.அதற்கு பதிலளித்த தலைமைச் செயலாளர், உணவு கொடுப்பதில் சில சில பிரச்சனைகள் எழுந்தன. தற்போது சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவமனைகளை கொரோனா மையங்களாக மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறோம். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகும்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தன்னார்வலர்களை கொண்டு வட்ட அளவில் குழு அமைத்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள பரிசீலிக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக முகக்கவசம் தரப்படுகிறது. முகக்கவசம் கட்டாயமாகி உள்ள நிலையில், வாய்ப்புள்ள இடங்களிலும், சுயஉதவிக்குழுக்கள் மூலமாகவும் உற்பத்தி செய்யலாம். அதனை எவ்வாறு விநியோகிப்பது என்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார்.முகக்கவசம் அணியாதவர்களை கட்டாயப்படுத்துவதற்காக அபராதம் விதிப்பதாக கூறியிருக்கிறோம். சலூன் கடைகளை திறக்க அநேகமாக நாளை (மே 23) உத்தரவிட இருக்கிறோம். சலவை நிலையங்களையும் படிப்படியாக திறக்க உள்ளோம் என்றும் தலைமைச் செயலாளர் கூறினார்.
தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இவ்வளவு பேர் இருப்பார்கள் என்று அரசு எதிர்பார்க்கவில்லை. ஒன்றரை லட்சம் பேர்களை அவரவர் மாநிலத்திற்கு அனுப்பியுள்ளோம். சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஒப்புதல் வழங்காமல் உள்ளன. புயல்காரணமாக மேற்குவங்கம், ஒடிசா அனுமதி தராமல் உள்ளது. இம்மாத 31 ஆம் தேதிக்குள் விரும்புகிற அனைவரையும் அவரவர் மாநிலத்திற்கு அனுப்பி வைப்போம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அரிசி, கொண்டைகடலை கொடுக்க கூறியிருக்கிறது. அதன்படி அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தலைமை செயலாளர் உறுதி அளித்தார்.
பறிமுதல் செய்த வாகனங்கள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க இன்றே (மே 22) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு அளிக்கிறேன். 100 நாள் வேலைத் திட்டத்தில் கிராமப்புற பேரூராட்சிகளில் அமல்படுத்த அதிகாரிகளுடன் கலந்து பேசி என்ன செய்யலாம் என்பகு குறித்து பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க பரிசீலிக்கிறோம். தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏப்ரல், மே மாத சம்பளம் வழங்க முதலமைச்சர் மூலமாக வற்புறுத்துவதாகவும், இதர கோரிக்கைகளையும் முதலமைச்சருடன் கலந்து பேசி நிறைவேற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.