தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி தடையின்றி வழங்க வேண்டும் என்று ஒன்றி
அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து
கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும், கொரோனா தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகி
மீண்டு வருகின்றனர். ஒன்றிய அரசின் தவறான கொள்கை காரணமாகவும், திட்டமிடலில்
போதிய அக்கறையின்மை காரணமாகவும், நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதின்
காரணமாகவும், அதிகார குவிப்பு கொள்கை மூலமாகவும் சுகாதாரம் பாதிக்கப்பட்டு
மாநிலங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.
விழிப்புணர்வுமிக்க தமிழகத்தில் தினசரி 7 முதல் 8 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி
போடுவதற்கான கட்டமைப்புகள் இருந்த போதிலும், அதை முழுமையாக பயன்படுத்த
இயலாத நிலைக்கு முடக்குவது ஒன்றிய அரசே. மாநிலத்திற்கு தேவையான தடுப்பூசிகளை
முன்கூட்டியே அல்லது விரைந்து அனுப்பப்படுமானால் முறையாக தடையின்றி தடுப்பூசிகளை
போட முடியும். இவை தவிர தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவிகித தடுப்பூசி அளிக்கப்பட்டாலும்,
அவற்றின் பயன்பாடு சுமார் 5 சதவிகிதம் என தமிழக அரசு சுட்டிக்காட்டியிருப்பதை
மைய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தனியாருக்கு ஒதுக்கீடு செய்த அளவை குறைத்து,
தமிழக அரசு கோரிய அளவிற்கு தடுப்பூசிகளை ஒன்றிய அரசு கால தாமதமின்றி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 10 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட
வேண்டுமெனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் 40 சதவிகித தடுப்பூசி போட்டாக வேண்டும் என
அறிவுறுத்தி இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை ஒதுக்கீடு செய்வதிலும், முறையாக அனுப்பி வைப்பதிலும்
பாரபட்சமின்றி ஒன்றிய அரசு செயல்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.