மார்ச் 21 விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
விழுப்புரம், மார்ச் 16- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் 21-ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடக்கவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. மாவட்டஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான துறை சார்ந்த கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரி நீரில் மூழ்கி பள்ளி மாணவன்பலி கிருஷ்ணகிரி, மார்ச் 16 – ஓசூர் அருகே பத்தலப்பள்ளியை சோ்ந்த 6 ஆம் வகுப்பு மாணவன் ஹர்சித் மோரணப்பள்ளியுல் உள்ள பழைய ஏரியில் குளிக்கச் சென்றுள்ளான். நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்ற போது நீரில் மூழ்கியுள்ளான்.தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் உயிரிழந்த மாணவரின் உடலை ஏரியில் இருந்து எடுத்து உடற்கூறு ஆய்விற்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஹட்கோ காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி கடலூர், மார்ச் 16- கடலூரை அடுத்த அன்னவல்லி ஊராட்சியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 45) இவர் கடலூரை அடுத்த சுப்பிரமணியபுரம் துணை மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சின்னத்துரை கோதண்டராமபுரம் பகுதியில் மின் கம்பிகளை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின் கசிவு ஏற்பட்டதால் சின்னதுரை மீது மின்சாரம் தாக்கி மேலே இருந்து கீழே விழுந்தார். அப்போது மின் கம்பமும் உடைந்து சின்னதுறை மீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சின்னதுரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா கடத்தியவர் கைது விழுப்புரம், மார்ச் 16- விழுப்புரம் மாவட்டம், மழவந்தாங்கல் அருகே போலீஸ் வாகன சோதனையில் பெங்களூரில் இருந்து காரில் குட்கா கடத்தி வந்தவரை கைது செய்தனர். கண்டாச்சிபுரம் மழ வந்தாங்கல் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் இருந்த காவலர்கள் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பெங்களூரில் இருந்து வாங்கி கடத்தி வருவதை கண்டுபிடித்தனர். இதில் குட்காவை கைப்பற்றி சுபாஷ் (29)என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 65 கிலோ எடை கொண்ட 3ஆயிரம் ஹான்ஸ் பாக்கெட், 457 கூலி லீப், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை: வேலூர் ஆட்சியர் வேலூர், மார்ச்16- வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பணிபுரியும் நியாயவிலைக்கடை பணியாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அறிக்கையாக பெற்று அவர்களின் ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடியிருப்பு பகுதிகளில் கொசுக்கள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.