தோழர் தூயவன் (எ) ஆரோக்கியசாமி காலமானார்\
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழின் முன்னாள் துணை ஆசிரியருமான தூயவன் (எ) ஆரோக்கியசாமி (78) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும், தீக்கதிர் நாளிதழின் துணை ஆசிரியராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர் தூயவன் என்ற ஆரோக்கியசாமி. பின்னர் கட்சியில் இருந்து விலகிய அவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை பெரியார்நகரில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு தீக்கதிர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் வி. பரமேஸ்வரன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராம. சுப்புராம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கவிவர்மன், சு. மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் சி. அன்புமணவாளன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தோழர் தூயவனுக்கு சூசையம்மாள் என்ற மனைவியும், ஜோசப் ஸ்டாலின் என்ற மகனும், ஸ்டெல்லா ஜென்னி என்ற மகளும் உள்ளனர். இறுதி நிகழ்ச்சி திங்களன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நடைபெறுகிறது.