விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சியில் ரூ.3 கோடியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் சார்ந்த விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கோவை செம்மொழி பூங்காவில் தமிழ்த் தாய் உருவச் சிலை நிறுவப்படும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பின்னோக்கு கலையரங்கம் அருகே ரூ.50 லட்சம் செலவில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்படும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 இந்த ஆண்டு முதல் செம்மொழி நாளாக கொண்டாடப்படும், அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாளான ஜூன் 15, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் மணிமண்டபம் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.