சென்னை:
காலதாமதமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முறையான ஏற்பாடுகளையும் செய்து, உடனடியாக தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் குறித்து நவம்பர் 28 வியாழனன்று தமிழக தேர்தல் ஆணையர் தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக தேர்தல் ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் ஆலோசனைகள் முன்மொழியப் பட்டன. இக்கூட்டத்தில் கட்சியின் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ப. சுந்தரராஜன், க. உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் வருமாறு:கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப் பட்டது. தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தனது கடமை என்ற அடிப்படையில் அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி இதற்கான காரணங்கள் குறித்து விளக்கமளிக்காதது வருத்தத்திற்குரியது என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம்.உச்சநீதிமன்றம், 2019 டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டுமெனவும் அதற்குள் தேர்தல் நடத்துவதற்கான தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முடித்திட வேண்டுமெனவும் பணித்துள்ள நிலையில் அதற்கான உரிய முயற்சிகள் விரைந்து எடுக்கப்படவில்லை என்பதால், தேர்தல் தள்ளி வைக்கப்படுமோ என்று மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எனவே காலதாமதமின்றி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முறையான ஏற்பாடுகளையும் செய்து, உடன் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட வேண்டுமென வற்புறுத்து கிறோம்.
தேர்தல் ஆணையம் வாக்காளர்சரிபார்க்கும் பணியில் களப்பணி யாளர்களை ஈடுபடுத்தி வருகிறது. அவர்கள் முகவரி மாற்றம், இறந்தவர் களை பட்டியலில் இருந்து நீக்குதல், சரியான புகைப்படம் இணைத்தல், வேறு சில பிழைகளை சரிசெய்தல், அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை இணைத்தல் ஆகியபணிகள் முறையாக நடைபெறவில்லை. வழக்கமாக வீடு, வீடாகச் சென்று மேற்கொள்ளப்படும் வாக்காளர் பதிவுப்பணி யும் நடைபெறவில்லை. அதிகாரிகள் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மட்டும் அலுவலகத்திலிருந்து கொண்டே நிறைவேற்றி வருகின்றனர். சென்னை மாநகரில் குறைவான பதிவுப் பணிகள் மட்டுமே நடந்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்திட உதவாது.
வாக்காளர் பெயர் பட்டியலில் இல்லாதவர்கள் வாக்காளர்களாக இணைக்க ஸ்மார்ட் போன் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவு, கிராமப்புறமற்றும் சாதாரண மக்கள் தங்கள் பெயரை இணைப்பதை சிக்கலை ஏற்படுத்தும். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் புதியவாக்காளர்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, வழக்கம் போல நேரடியான மனுக்கள் மூலம் வாக்குகளைச் சேகரிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திட வேண்டும்.
மறுவரையறை செய்யப்பட்ட எல்லைக்குள் இணைக்க வேண்டிய வாக்காளர்கள் சம்பந்தமில்லாமல் வேறு வார்டு உள்ள பகுதிக்கு நூற்றுக்கணக்கில் மாற்றப்பட்டு உள்ளனர். உதாரணமாக, பழனி நகரத்தில் 15-வது வார்டு வாக்காளர்கள் 16, 17-வது வார்டுகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். ஒரே வீட்டில் உள்ளவர்கள் கூட வெவ்வேறு வார்டுகளில் வாக்களிக்க வேண்டிய நிலைமை உள்ளது. இதனால் 3 விதமான வாக்காளர்கள் ஒரே வார்டில் இணைக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையரிடம் மனு அளித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சிகள் அமைப்பது குறித்து தெளிவான அறிவிப்புகள் ஏதுமில்லை. எனவே, உடனடியாக அம்மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி அமைப்புகள், அதற்கேற்பமாவட்ட ஊராட்சி வார்டுகள் பிரிவினை ஆகியவைகளை அறிவிக்க வேண்டும்..போலி வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அது குறித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர்களுக்கு நேரடி தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் தற்போது அதிரடியாக மறைமுகத் தேர்தல் என அறிவித்திருப்பது தேவையற்ற குழப்பங்களையும், நீதிமன்றத் தலையீடுகளுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஏற்கனவே இருக்கும் நடைமுறையின் அடிப்படை யில் மேற்கண்ட தலைவர்கள் தேர்தலுக்குநேரடித் தேர்தல் நடத்திட வேண்டும்.
இடஒதுக்கீடு பிரச்சனையிலும் ஒரு தெளிவற்ற நிலை உள்ளது. இதற்கான முறையான அறிவிப்புகள் ஏதும்வெளியிடாதது பல ஐயங்களை ஏற்படுத்துகிறது. எனவே, தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து பொறுப்புகளுக்கும் முறையான இட ஒதுக்கீட்டு அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும்.தமிழகத்தில் தேர்தலை பல கட்டங்களாக நடத்துவதற்கான ஆலோசனைகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இவ்வாறு தேர்தலை நடத்துவது பல முறைகேடுகளுக்கு வழி ஏற்படுத்தும். எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து நகராட்சிகளுக்கும் உடனடியாக ஆணையர்களை பணி நியமனம் செய்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.