சாதி பெயரைக்கேட்டு செய்தியாளரை மிரட்டிய கிருஷ்ணசாமி கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கலந்து கொண்டுள்ளார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தோல்வியடைந்தது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சியின் செய்தியாளர் கோகுல் கேள்வியெழுப்பிய போது கிருஷ்ணசாமி அவரிடம் உன் சொந்த ஊர் எது, எந்த சாதி நீ என்றெல்லாம் கேள்வியெழுப்பி அவரை அச்சுறுத்தியுள்ளார். செய்தியாளர்கள் சாதி, மதம், இனம் போன்ற எல்லா பிரிவினைகளுக்கும் அப்பாற்றப்பட்டவர்கள் என்பது நாட்டில் உள்ள எல்லா தரப்பு மக்களும் அறிந்தது. பல ஆண்டு காலமாக பொது வாழ்வில் உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் இதனை தெரிந்து கொள்ளக்கூட முயற்சிக்காதது முதலில் நகைப்பை தான் ஏற்படுத்துகிறது.
ஒருவேளை கட்சி கூட்டங்களின் போது அவர் சொல்வதெற்கெல்லாம் கைதட்டி ஆமோதிக்கும் அவர் கட்சியினர் போல் செய்தியாளர்கள் நடந்துகொள்ள வேண்டும் என அவர் எதிர்பார்த்தால் அதற்கு பத்திரிகையாளர்கள் ஒரு போதும் உடன்பட மாட்டார்கள் என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். சமூக அக்கறையோடு செயல்படும் பல செய்தியாளர்களை உள்ளடக்கிய இந்த துறையில் கேள்வி எழுப்புவதும், பதில்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் தான் செய்தியாளர்களின் வேலையே தவிர தங்களின் இன, மொழி, மத நம்பிக்கைகளை வெளியில் சொல்வது அல்ல. இது போன்ற செயல்களை டாக்டர் கிருஷ்ணசாமி இத்துடன் நிறுத்துக்கொள்ள வேண்டும் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. மேலும் செய்தியாளரிடம் மோசமாக நடந்து கொண்டதற்காக அரசியல் நாகரீகத்துடன் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.