முந்திரி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கேரளத்தில் நுழைவுத்தேர்வு எழுத பயிற்சி
கொல்லம், ஏப்.27-கேரள மாநிலத்தில் உள்ள முந்திரி தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கான நுழைவுத் தேர்வுகளை எதிர் கொள்வதற்கான பயிற்சி பால்குளங்கரையில் உள்ள தொழிற்சாலையில் வழங்கப்பட்டது.திறன்மிகு மாணவர்கள் பொருளாதார காரணங்களுக்காக உயர்ந்த கல்வியை பெறும் வாய்ப்பு நழுவிவிடக்கூடாது என்கிற நோக்கத்துடன் கேரள முந்திரி கழகம் ஒரு மாதகால பயிற்சியை அளித்துள்ளது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயமோகன் தலைமையிலான இயக்குநர் குழு பொறுப்பேற்ற பிறகு முந்திரி தொழிலாளர்களின் குழந்தைகளான 16 பேருக்கு சட்டப் போராட்டத்தின் மூலம் இஎஸ்ஐ ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம் : சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது
திருநெல்வேலி, ஏப்.27 -இடிந்து விழும் நிலையிலுள்ள உபயோகமற்ற, பழுதடைந்த அரசு அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாககட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட வீராணம் ஊராட்சியில் வீராணம் மெயின் ரோட்டில் பஞ்சாயத்து அலுவலக மேல்புறத்தில் விஏஓ ஆபீஸ் இயங்கி வந்த அரசு கட்டிடம் உள்ளது. சுமார் 65 வருடங்களுக்கு மேலானஇக்கட்டிடம் பழுதடைந்த நிலையில் கடந்த சில வருடங்களாக எவ்வித உபயோகமும் இல்லாமல் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.இதனால் இங்கு அதிகமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. அவ்வப்போது இந்த குப்பைகளில் சிலர் தீ வைத்து விடுகின்றனர். அதனால் அடிக்கடி புகைமூட்டம் எழும்பி சுவாச கோளாறு ஏற்பட்டு, முதியோர்-குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் சமூக விரோதிகள் இங்கு அமர்ந்து மது அருந்துதல், புகையிலை பொருட்களை பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பராமரிப்பு இல்லாத இக்கட்டிடம் பழுதடைந்துள்ள நிலையில் கனமழை நேரங்களில் இடிந்து விழும் ஆபத்து இருப்பதாக இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதனை கண்டுகொள்ளவே இல்லை.ஆகவே பழுதடைந்துள்ள இந்த கட்டிடத்தை முழுமையாக இடித்து விட்டு அந்த இடத்தில் சிறுவர் பூங்கா, நூலகம், கலையரங்கம், ரேசன் கடை போன்றவற்றை அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.