சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் விவரங்களை மருத்துவமனைகள் சரியாக தருகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண் காணிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் விவரங்கள்முழுமையாக தெரிவிக்காததால் இறப்பு சான்றுகள் தருவதில் சிக்கல் ஏற்படுவதாக பல தரப்புகளில் இருந்து புகார் எழுந்து வருகின்றது.இந்த பிரச்சனையில் முதலமைச்சரும் சுகாதாரத்துறை அமைச்சகமும் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வெ.இறையன்பு கடிதம் ஒன்றை எழுதிஇருக்கிறார்.அந்தக் கடிதத்தில், கொரோனாவால் உயிரிழப்பவர்கள் பற்றிய முழுமையான விவரங்களை மருத்துவமனைகள் தருகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண் காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
உயிரிழப்பவர்களின் பெயர், முகவரி, வயது உள்ளிட்டவற்றை மருத்துவமனைகள் சரியாக கொடுத் தால் மட்டுமே இறப்பு சான்றுகள் தர இயலும். இந்த தகவல்களை மருத்துவமனைகள் சரியாக தராததால் இறப்பு சான்று பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளதையும் தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக இறப்பு,வாரிசு சான்றிதழ் தாமதமின்றி கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் ஏற்படக்கூடாது என்றும் அனைத்து மாவட்டஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி இருக்கிறார்.
***************
பேருந்து சேவைக்கு மருத்துவ குழு பரிந்துரை
வைரஸ் தொற்றின் பரவல் முழுமையாக குறையும்வரைக்கும் ஊரடங்கு தளர்வில் 50 சதவீத பேருந்து இயக்கத்திற்கு மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது.சென்னை தலைமை செயலகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனையில் மருத்துவ குழு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் தொற்று அதிகமுள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என மருத்துவ குழுவினர் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரியவணிக நிறுவனங்கள், மால்களை திறக்கவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.