சென்னை, மே 15 -மக்கள் பிரச்சனைகளில் நேர்மையாக போராடி, ஒழுக்க நெறிகளை கடைபிடித்து கட்சிக்கு பெருமை சேர்த்தவர் தோழர் இந்திராஎன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.அண்ணாநகர் பகுதி, தா.பி.சத்திரம் கிளை உறுப்பினர் தோழர் எஸ்.இந்திரா உருவப்படத்திறப்பு நிகழ்ச்சி செவ்வாயன்று (மே 14) நடைபெற்றது. உருவப்படத்தை திறந்து வைத்து கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “அச்சுறுத்தல், அடக்குமுறைகளை மீறி கட்சி தோழர் இந்திராவும்-சுகுமாரும் கட்சி அமைப்புகளை தா.பி.சத்திரம் பகுதியில் கட்டி வளர்த்தார். கணவனும் மனைவியும் ஒன்றாக களத்தில் நின்று ஒன்றாக பணியாற்றி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தனர்” என்றார்.“இயக்கத்தில் இருப்பதால் சிலருக்கு பெருமை கிடைக்கும். சிலர்இருப்பதால் அந்த இயக்கத்திற்கு பெருமை கிடைக்கும். இந்திரா இயக்கத்திற்கு பெருமை சேர்த்தவர். தா.பி.சத்திரம் பகுதியில் கட்சியின் அடையாளமாக இந்திராவும், சுகுமாரும் திகழ்ந்தனர். கட்சி வளர்ச்சிக்காக தனது சொந்த இடத்தையே வழங்கியுள்ளனர். கட்சிக் கோட்பாடுகளை குடும்பத்திற்குள் செயல்படுத்தி முன்னுதரணமாக உள்ளனர். மார்க்சிய லட்சிய பிடிப்போடு செயலாற்றியவர்கள்” என்றும் அவர் புழந்துரைத்தார்.“இந்திராவின் வாழ்க்கை கட்சி ஊழியர்கள் முன்னுதரணமாக கொள்ள வேண்டும். அவரது நினைவுகூறும் வகையில் தா.பி.சத்திரம் பகுதியில் ஒரு நினைவு நூலகத்தை உருவாக்குவோம்” என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.இந்நிகழ்ச்சிக்கு பகுதிச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமைதாங்கினார். மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை), மாநிலக்குழு உறுப்பினர் பா.ஜான்சிராணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.குமார், தமுஎகசமாவட்டச்செயலாளர் வே.இரவீந்திரபாரதி, விசிக பகுதிச் செயலாளர் பா.வேலுமணி, மதிமுக பகுதிச் செயலாளர் ராம.அழகேசன், சிபிஎம்பகுதிக்குழு உறுப்பினர் த.சுகுமார், 103வது வட்டச் செயலாளர் கே.லெனின்தாஸ் உள்ளிட்டோர் பேசினர்.