போராடும் அரசு மருத்துவர்களை அழைத்துப்பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக மருத்துவர்களை அரசு மிரட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
கடந்த ஏழு நாட்களாக உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட சில மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் நீண்டகாலமாக நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தபோதும், ஏற்கனவே பல கட்ட போராட்டங்களை நடத்தியபோதும், தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியது அரசின் தவறான அணுகுமுறையாகும். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர அரசு மருத்துவர்களுக்கு வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையில் அமைதியாக பணிபுரிந்து வந்த மருத்துவர்களை இத்தகைய போராட்டத்தில் தள்ளிவிட்டது தமிழக அரசுதான் என்பதை மூடி மறைக்க முடியாது.
போராடும் அரசு மருத்துவர்களை அழைத்துப்பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக, மருத்துவர்களை ஊர்மாற்றம் செய்வதும், பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மாற்று டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என மருத்துவர்களை மிரட்டும் அரசின் ஆணவப்போக்கு ஒருபோதும் வெற்றிபெறாது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல்கள் பரவி வருவதால், அதிகமான நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இது நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள், பொதுமக்கள் நாளைய மருத்துவர்களாகவுள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு குரல் எழுப்ப வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.