சென்னை வெள்ளம் என்று கூறி குஜராத் புகைப்படத்தை பகிர்ந்த பாஜக நிர்வாகியை டிவிட்டரில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் ஒரேநாள் மழையில் நீச்சல்குளம் ஆன சென்னை என விமர்சித்திருந்தார்.
ஆனால், இந்த விமர்சனத்துடன் அவர் இணைத்திருந்த புகைப்படம் குஜராத் வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்த நெட்டிசன்கள், இது பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் 2017ஆம் அண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். விமர்சனம் செய்யுங்கள் ஆனால் அதை கொஞ்சம் உண்மையாக செய்யுங்கள் எனவும் தொடர்ந்து இதுபோன்று போலி செய்திகளை பரப்பிவரும் பாஜகவினரை நெட்டிசன்கள் கடுமையாக கேலிசெய்து வருகின்றனர்.