சிங்கப்பூர், மலேசியாவிற்கு கோவிட் கால விமான போக்குவரத்திற்கான ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒன்றிய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை.
இதனால் அந்நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் நேரங்களில், நேரடி விமான சேவை இல்லாத காரணத்தால், துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் காரணமாக பல்வேறு இன்னல்களுடன் அதிக விமானக் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது.
இத்தகைய இடர்பாடுகளைத் தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்க, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் தற்காலிக கோவிட் கால விமான போக்குவரத்து ஏற்பாடுகள் உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு கோரி, ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.