சென்னை:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் வறுமை நிறைந்த சோமாலியா நாடாக இந்தியா மாறும் அபாயம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 40 நாட்களுக்கு மேலாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்த்திடவும், தமிழக விவசாயிகளின் ஒருமைப் பாட்டை தெரிவிக்கும் வகையிலும் புதனன்று (ஜன.6) சென்னையில் காத்திருப்புப்போராட்டம் தொடங்கியது.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெறும் இந்தப்போராட்டத்தை தொடங்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-தலை நகர் தில்லியில் உறைந்துவிடும் கடுங்குளிரில் விவசாயிகள் 42வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 62 பேர் உயர்த்தியாகம் செய்துள்ளனர். விவசாயி களின் போராட்டம் தொடருமேயானால் ராணுவத்தினரும் பங்கேற்கும் நிலை உருவாகும்.மாநிலப்பட்டியலில் உள்ள விவசாயம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றுவது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல். அதனை கண்டிக்க முடியாத தமிழக முதலமைச்சர், மாநில சுயாட்சி பேசும் கட்சியின் தலைவர் மத்திய அரசு சட்டத்தை ஆதரிக்கிறார். தமிழகத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்கிறார்.
70 வருடமாக விவசாயிகளுக்கு இருந்த குறைந்தபட்ச உரிமைகளையும் பறிக்கும் வகையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் 3 சட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தால் நுகர்வோருக்குத்தான் பாதிப்பு. விவசாயிகள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை. நாட்டு மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜன.26 ஆளுநர் மாளிகை முற்றுகை
தற்கொலை செய்து கொண்டால் கூட நிவாரணம் கிடைக்காத நிலையில் விவசாயிகள் போராட தொடங்கி உள்ளனர்.விவசாயிகள் போராட்டம் எக்ஸ்பிரஸ் ரயில் போல செல்கிறது. அதை தடுக்க ஓணான்தண்டவாளத்தில் தலை வைத்தது போல்பிரதமர் செயல்படக்கூடாது. அகில இந்தியபோராட்டக்குழு ஜனவரி 26 அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. அதன்படி வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தும் போராட்டம் சென்னையில் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
பினராயிக்கு பாராட்டு
இந்தப் போராட்டத்தை ஆதரித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கூறுகையில், மத்திய அரசின் நெருக்கடிகளை மீறி கேரள அரசுவேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம்நிறைவேற்றுகிறது. ஆனால் தமிழகஅரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பல்வேறு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. அவற்றை உச்சநீதிமன்றம் கவனமாக விசாரித்து தீர்ப்பளிக்கும் என்று நம்புவதாக கூறினார்.
ஜன.13 நகல் எரிப்பு
முன்னதாக போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், ஜனவரி 13 போகியன்று வேளாண் சட்ட நகல்கள் தீ வைத்து கொளுத்தும் போராட்டம் நடைபெறும் என்றார்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது, காங்கிரஸ் கட்சி சார்பில் சசிகாந்த் செந்தில், விவசாயிகள் சங்கத்தலைவர்கள் பெ.சண்முகம், வே.துரை மாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர். காவல்துறை அனுமதி இல்லாததால் காத்திருப்பு போராட்டம் தர்ணா போராட்டமாக மாறியது.