tamilnadu

img

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை சேர்த்து ,திருத்திய அரசாணை வெளியிடுக.... முதலமைச்சருக்கு அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள்....

சென்னை:
 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் புதிய நல்வாழ்வுக் காப்பீட்டு திட்டத்தில் (NHIS) அரசாணை வெளியிட்டு பிரிமியத்தொகை மாத பிடித்தம் ரூ.300 உயர்த்தி அரசு பங்களிப்பு உறுதி செய்ய வேண்டும். சிகிச்சையில் சில நோய்களை சேர்த்து, திருத்திய அரசாணை வெளியிட வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, மாநிலப் பொதுச்செயலாளர் ஆ. செல்வம் ஆகியோர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 2008ல் துவங்கப்பட்டு அப்போது ஒரு ஊழியருக்கு ரூ.20 வீதம் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து, அரசு சார்பில் பங்களிப்பு செய்தும் 4 ஆண்டுகளில் இரண்டு லட்சம் காப்பீடு வழங்கப்பட்டது.

அதன்பின்பு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு2012-2016ல் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்என்ற பெயரில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம்  மூலம் ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.150 வீதம் ஊதியத்தில் பிடித்தம் செய்து, தமிழக அரசு சார்பில் சேவை வரி பங்களிப்பும் செய்து ரூ.4 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வந்தது.அதனைத் தொடர்ந்து 2016-2020ல் கடந்த அ.தி.மு.க. அரசு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் அரசு ஆணை 202/நிதித்துறை, நாள்.30.06.2016 இன்படி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் மாதம் ரூ.180- என உயர்த்தி, தமிழக அரசு பங்களிப்பு ஏதுமின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சிகிச்சை பெறும் தொகை ஏற்கனவே இருந்த ரூ.4 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.7.5  லட்சம் என உச்சவரம்பு நிர்ணயித்தது.தற்பொழுது ஒரு அரசு ஊழியருக்கு ரூ.300- (295+5 =300) மாத ஊதியத்தில் பிடித்தம்  செய்யப்படும்,  சிகிச்சைக்கான காப்பீடு ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.7.5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த  10 ஆண்டுகால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆளாக்கப்பட்டு, பல்வேறு குறைபாடுகளை களைய வலியுறுத்தி பல்வேறு கட்டபோராட்டங்களை நடத்தியுள்ளோம். அவ்வாறு நடத்தியும், இத்திட்டத்தில் குறைகள் களையப்படாமல் இருந்து வந்துள்ளது.

ஆனால் தற்பொழுது  பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு,  அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த அரசு ஆணை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக  தமிழக அரசு, ஊழியர்களுக்கு எவ்வித  தொகையையும் பங்களிப்பு செய்யவில்லை, அது மட்டுமல்ல எங்களின் நீண்டநாள் கோரிக்கை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததும்  மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசு ஆணையில் கீழ்க்கண்ட விவரங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு திருத்திய அரசாணைவெளியிட வேண்டுமென கேட்டுக்கொள் கிறோம்.

கோரிக்கைகள்
$  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.300- மாதம் பிடித்தம் செய்யப்படுவதால் 4  ஆண்டுக்கான காப்பீடு ரூ.8 லட்சமாக உயர்த்திட வேண்டும்.

$  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.7.5 லட்சம் என்பதை 15 லட்சமாக உயர்த்த வேண்டும். அறுவை சிகிச்சையின்போது இரத்தக்கொடை கொடுப்பவருக்கு  ஆகும் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவச் செலவுகளை காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும்.

$    குடும்பத்தில் கணவன்/ மனைவி/ குழந்தைகள் (25 வயதுவரை) இத்திட்டத்தில்   பயன்பெற முடியும் என்ற முறை மாற்றி, திருமணம்ஆகும் வரை என்றும், தன்னை சார்ந்த பெற்றோர்கள், தத்து குழந்தை, விதவை, விவாகரத்து பெற்ற ஆண்/பெண் ஆகியோர் இத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும்.

$   மருத்துவ சிகிச்சையின்போது ஏற்படும் மருத்துவச் செலவுகள் முழுவதையும் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். பேக்கேஜ்  முறையை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும்.

$  கட்டணமில்லா சிகிச்சை என்பதை உறுதிப்படுத்திட வேண்டும். 

$  தற்பொழுது உள்ள என்எச்ஐஎஸ் திட்டத்தில்உள்நோயாளி சிகிச்சை மட்டும்  அனுமதி யளிக்கப்பட்டு உள்ளது. வெளிநோயாளி சிகிச்சை மற்றும் ஓராண்டு கண்காணிப்பு சிகிச்சை  அனுமதிக்கப்பட வேண்டும்.

$   தற்பொழுது உள்ள இத்திட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர் விருப்பக் கடிதம் கேட்கப்பட வேண்டும்.

$   இத்திட்டத்தில் 203 வகையான  அங்கீ கரிக்கப்பட்ட சிகிச்சை முறை மற்றும் 1169   மருத்துவ மனைகள் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளதை  வரவேற்கிறோம். ஆனால் இன்னும் சில நோய்களுக்கான சிகிச்சை முறை சேர்க்கப்பட வேண்டும். (உ.ம். குடல் ஒட்டு அறுவை சிகிச்சை, காரணமில்லா ரத்தப்போக்கு, கருப்புபூஞ்சை, மலேரியா) 

$  காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக மாவட்ட அளவில் அரசு ஊழியர், ஆசிரியர், மருத்துவமனை நிர்வாகிகளை இணைத்து மூன்று மாதத்திற்கொரு முறை குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டும்.

$   தவிர்க்க முடியாத காரணத்தால், காப்பீடு பெற இயலாத நோயாளிகள், மீள மருத்துவக் காப்பீட்டை பெற கால அவகாசம் 30 நாளிலிருந்து 90 நாட்களாக உயர்த்திட வேண்டும்.

$   அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொரோனா காலத்தில் சிகிச்சை அளிக்க மறுக்கும்மருத்துவமனைகள் மீதும்,  அதேபோல்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொழுது முன்பணம் கட்ட வேண்டும்  என்று கட்டாயப்படுத்தும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை கடைகோடி மக்களுக்கு கொண்டு சேர்க்க, இந்த கொடிய பெருந்தொற்று காலத்தில் உயிரை துச்சமென  மதித்து  களப்பணியாற்றும் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கடந்த அ.தி.மு.க. அரசு பறிக்கப்பட்ட / மறுக்கப்பட்ட கோரிக்கைகள் தி.மு.க. அரசு நிறைவேற்றும் என்றும் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை கட்டணமில்லா சிகிச்சை என்பதை உறுதிப்படுத்திடவும், தமிழகத்தில் உள்ள 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் அவர்கள் எங்களது நியாயமான கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றித்தர வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.இந்த மனு,  நிதி- மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,  தலைமைச் செயலாளர்,  நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனர்.