சென்னை:
தனியார் மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கைகளில் 25 விழுக்காட்டை அரசு எடுத்துக்கொண்டு கோவிட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்குஇலவசமாக சிகிச்சை வழங்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ல் ஜி.ராம கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.வருமான வரி செலுத்தாத மக்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், மாநில அரசு 5,000 ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும், அமெரிக்காவில் காவல் துறையின் நிறவெறியால் ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் செவ்வாயன்று (ஜூன் 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின்னர் ஜி.ராம கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
அமெரிக்காவில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்பவரை காவல்துறையினர் காலால் மிதித்து கழுத்தை நெறிக்கும் போது, எனக்கு மூச்சு திணறுகிறதுஎன்று அவர் கூறும் போது கூட அதற்கு செவிசாய்க்காமல் அந்த காவலர் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். 3 காவலர்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அந்த இனவெறி படுகொலை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் கருப்பின மக்கள், வெள்ளையர்களும் இணைந்து அரசுக்கு எதிராக, காவல் துறைக்கு எதிராக நிறவெறிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற அடைப்படையிலும், எங்களுக்கு சமத்துவம் வேண்டும், சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் இதுவரை காவல் துறை செய்த கொலைக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறக போராடக் கூடிய மக்கள் மீது ராணுவத்தை ஏவி போராடக் கூடியவர்களை அடக்குவேன் எனக் கூறுகிறார். இந்தச் சூழ்நிலையில்தான் இடதுசாரி கட்சிகள் போராடக் கூடிய அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம்.தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில், நீட் தேர்வு வந்த பிறகு 15 விழுக்காடு இடங்களையும், எம்.டி. எம்.எஸ்.சேர்க்கையில் 50 விழுக்காடு இடங்களையும் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் இருக்கக் கூடிய சட்டத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலிவாய்ப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சட்டம் இருக்கிறது. மெடிக்கல் கவுன்சிலும் மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் இடஒதுக்கீட்டிற்கு என்ன விதி இருக்கிறதோ, அந்த விதிகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் சிபிஎம் வழக்கு
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ள போதிலும், ஒரு சீட்டு கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநில அரசும் வழக்கு தொடுத்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியின மக்களுக்கு ஏற்கனவே உள்ள சட்டத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஸ்டான்லி, ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் இட மில்லை. தனியார் மருத்துவமனைகளில் 25 விழுக்காடு படுக்கைகளை அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து விட்டதாக மாநில அரசு அறிவித்தது. ஆனால் அது அமலாகவில்லை. எனவே தனியார் மருத்துவமனைகளில் உள்ள 25 விழுக்காடு படுக்கைகளை அரசுகட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து பாதிக்கப் பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குடும்பத்திற்கு ரூ.5000 வழங்குக!
பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கவில்லை. எனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு மாதம் மத்திய அரசு 7,500 ரூபாயும், மாநில அரசு 5,000 ரூபாயும் என 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி அல்லது 10 கிலோ கோதுமை வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண ஏழை, எளிய மக்களையும், அமைப்பு
சாரா தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கவில்லை
கொரோனா தொற்றை தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் போதிய முயற்சி எடுக்கவில்லை. சென்னையில் 23 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சமூகபரவல் இல்லை எனக் கூறுகிறார்கள். மார்ச் மாதம் பிரதமர் மோடி பொதுமுடக்கத்தை அறி
விக்கும் போது, நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5,000 பேர். இன்று தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி விட்டது. உலகளவில் 6ஆவது இடத்திற்கு வந்துள்ளது. மரணங்கள் பல ஆயிரத்தை தாண்டிக் கொண்டி ருக்கின்றன. எனவே கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்திலே மிகவும் நலிவடைந்த பிரிவினர் மாற்றுத்திறனாளிகள். அவர்களின் அமைப்பின் சார்பில் நிவாரணம் கேட்டு புதனன்று (ஜூன் 10) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.