tamilnadu

img

சென்னை மாநகரப் பேருந்துகளில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் பெறும் புதிய வசதி அறிமுகம்!

யு.பி.ஐ வசதியைப் பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதியைச் சோதனை முறையில் போக்குவரத்துத் துறை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே கர்நாடக உள்பட சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
முதல் கட்டமாக பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் யு.பி.ஐ  மற்றும் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் வழங்கப்படுகிறது. தொடுதிரை வசதி கொண்ட புதிய கருவிகள் மூலம் பயணிகள் ஏறும் மற்றும் இறங்கும் இடங்கள் தேர்வு செய்து டிக்கெட் வழங்கப்படுகிறது.
அதற்காகப் பேருந்து நடத்துநர்களுக்கு  யுபிஐ மற்றும் கார்டுகள் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கும் புதிய கையடக்கக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. 
இத்திட்டத்தின் செயல்பாடுகளைப் பொறுத்து சென்னை நகரில் உள்ள மற்ற பணிமனைகளில் உள்ள பேருந்துகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் காா்டு, யு.பி.ஐ ஐ.டி, மற்றும் க்.யூ.ஆா் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு பெற முடியும்.
இந்த கருவியில் டிக்கெட் பெற UPI பயன்முறை தேர்ந்தெடுக்கப்பட்டால், QR-குறியீடு திரையில் காட்டப்படும், பயணிகள் தங்கள் போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தலாம். 
சோதனைத் திட்டமாக இதை மாநகர போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி உள்ளது. அதன் வெற்றி, பயன்பாடு, நிறை- குறைகளைக் கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள மற்ற பணிமனைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டமைப்பின் கீழ், பயணிகள் மொபைல் செயலியைப் பயன்படுத்தி தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்துக்கொண்டு பேமெண்ட் செய்ய முடியும். இந்த செயலியை MTC பேருந்துகளில் தவிர சென்னை மெட்ரோ ரயில் மற்றும் உள்ளூர் ரயில்கள் பயணிக்கப் பயன்படுத்தலாம்.
இந்த பொதுவான டிக்கெட் முறையின் மூலம் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (Cumta) பெறும் வருவாய் MTC மற்றும் CMRL மற்றும் தெற்கு ரயில்வே போன்ற பிற போக்குவரத்து அமைப்புகளுக்குப் பகிர்ந்து கொள்ளப்படும்.