சென்னை:
தொலைக்காட்சி, நூலகம், ‘வைபை’ வசதியுடன் சென்னை கிண்டியில் கொரோனா சிறப்பு மருத்துவமனை தயார்ப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் திறந்து வைக்கிறார்.தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டிடம், கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் 750 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 70 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. 300 படுக்கை வசதியில், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே அதிநவீன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓரிரு நாளில் தொடங்கி வைக்க உள்ளார்.இந்த மருத்துவமனையின் சிறப்பு அம்சங்கள் குறித்து ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ஆனந்த்குமார் கூறியதாவது:-கிண்டி கொரோனா சிறப்பு மருத்துவமனையில், கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டு அதிக மூச்சுத்திணறலால் வருகிறவர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது.கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஒரே நேரத்தில் 20 பேர் அமர்ந்து ‘டி.வி.’ பார்க்கும் வசதியும், 30 பேர் புத்தகம் படிக்கும் நூலக வசதியும் அமைக்கப் பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் யோகா பயிற்சி அளிக்கவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது.‘வைபை’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், நோயாளிகள் வீட்டில் இருப்பவர்களிடம் காணொலி காட்சி மூலம் பேச முடியும். நோயாளிகளுக்கு தேவையான சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து பரிசோதனை வசதிகளும் ஒரே இடத்தில் அமைந்து உள்ளது. இந்த சிறப்பு மருத்துவமனை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட உள்ளது.