சென்னை:
அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று இந்தியஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுக் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கான ஊதியத்தை தமிழக அரசு இதுவரையிலும் வழங்கவில்லை. ஏற்கனவே, மிகவும் குறைவான ஊதியத்தில் பணியாற்றிவரும் இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருப்பது தமிழக அரசின் மனிதத் தன்மையற்றசெயலையே வெளிப்படுத்துகிறது.கொரோனா ஊரடங்கால் பெரும்பகுதி தமிழக மக்கள் வருமானமின்றி தவிக்கும் சூழலில், தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும்கௌரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்காமல் இருப்பது சரியான முன்மாதிரியாக இருக்காது. எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களால் நடத்தப்படும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையிலும், மணி நேர அடிப்படையிலும் பணியாற்றும் விரிவுரையாளர்களுக்கும் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காத நிலை உள்ளது. எனவே, அவர்களுக்கான ஊதியத்தையும் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.