சென்னை:
அரசு ஊழியர்களுக்கான மருத் துவ காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மருத் துவக் காப்பீட்டுத் திட்டம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் நலன் கருதி முதன்முதலாக 2008ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்டு தற்சமயம் நடைமுறையில் உள்ளது.இத்திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அரசாணையின்படி அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கான புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 30.06.2020 உடன் முடிவடைந்தது. அச் சமயத்தில் கொரோனா பெருந்தொற் றின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால், தமிழக அரசு நோய்த் தடுப்புப் பணிகளின் காரணமாக அத்திட்டத்தைப் புதுப்பிக்காமல் மேலும் ஓராண்டிற்கு அதாவது 30.6.2021 வரை நீட்டித்து உத்தரவிட்டது.எனவே, 1.7.2016 முதல் நடைமுறையில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 30.6.2021 உடன் முடிவடைய உள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர் - ஆசிரியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் ரூ.180 பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு பல்வேறு நோய்களுக்கான அறுவைச் சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ. 4 லட்சமும், சில பிரத்யேக அறுவைச் சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ.7.5 லட்சமும் வழங்க அரசாணையில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.
ஆனால், அரசாணையின்படி மேலே குறிப்பிட்டவாறு அரசு ஊழியர்களுக்கு வழங்கப் படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை என்பது பல்வேறு நோய்களுக்கு உண்மையிலேயே செலவாகும் தொகையை விடக் குறைவாக உள்ளது. குறிப்பாக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, புற்று நோய் போன்ற நோய்களுக்கு ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியே காப்பீடாக வழங்கப்படுகிறது. எனவே, காப் பீட்டுத் தொகையை சிகிச்சைச் செலவுகளுக்கு ஈடாக உயர்த்திட வேண்டும்.மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டாலும், காப்பீட்டு நிறுவனம் பேக்கேஜ் அடிப் படையில் மருத்துவ சிகிச்சைகளுக்கான மொத்தச் செலவில் 20%முதல் 50% வரை மட்டுமே காப்பீட்டுத் தொகையாக வழங்குகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மருத்துவச் செலவில் பெரும்பகுதியை தாங்களே கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் உண்மையான பயனை ஊழியர்களுக்குக் கிடைக்க விடாமல் செய்துவிடுகிறது. இவ்விஷயத்தில் காப்பீட்டு நிறுவனம் தமிழக அரசையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றி வருவதோடு மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெற்று வருகிறது.தமிழ்நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் மாதந் தோறும் ரூ.180/- வீதம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ஆண்டுக்கு 259 கோடி ரூபாய் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1295 கோடி வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் காப்பீட்டு நிறுவனம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கிய தொகையைக் கணக்கிட்டால் மிகவும்குறைவாகவே இருக்கும்.2016ஆம் ஆண்டில் அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் செய்து கொண்டது. யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி இத்திட்டத்தைச் செயல் படுத்தும் துணை ஒப்பந்தத்தை எம்டி இந்தியா என்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளது. இந்நிறுவனம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் உண்மையான நோக்கமாகிய “கட்டணமில்லா சிகிச்சை” என்பதை நிறைவேற்றாமல் கொள்ளை லாபம் அடித்துவருகிறது.
எனவே, மேற்கண்ட காப்பீட்டு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப் பந்தம் 30.06.2021 உடன் முடிவடையும் நிலையில், மேலும் அதை நீட்டிக்காமல் 01.07.2021 முதல் தமிழக அரசே இத்திட்டத்தை ஏற்று நடைமுறைப் படுத்தும் பொறுப்பை மேற்கொண்டு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப் படுத்தி இத்திட்டத்தின் உண்மையான நோக்கம் நிறைவேற ஆணையிட்டு உதவிட வேண்டும்.மேலும், அரசாணைப்படி, கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலையில் இத்திட்டத்தின்கீழ் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை வழங்க மாநிலம் முழுவதும் பெரும்பாலான அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மறுத்துவிட்டன.இதனால் அம்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் முழுக்கட்டணத்தையும் தாங்களே செலுத்தி சிகிச்சை பெற்றனர். இவ்வாறு அரசாணைக்குப் புறம்பாகச் செயல்பட்ட தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அவ்வாறு சிகிச் சைக்கான கட்டணத்தைச் செலுத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மருத்துவ சிகிச்சைக்கான முழுச் செலவையும் மருத்துவமனை ரசீதுகளின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனம் வழங்கிடவும் தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், 01.07.2021 முதல் அரசு ஊழியர் - ஆசிரியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விடுபட்டுள்ள மேலும் சில நோய்களுக்கான சிகிச்சைகளையும் இணைத்திட வேண்டும். அதே போன்று அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறத் தகுதியான குடும்ப உறுப்பினர்களின் பட்டியலில் அரசு ஊழியர்களின் தாய் மற்றும் தந்தை ஆகியோரையும் இணைத்திட வேண்டும்.மேலும், தற்போதைய அரசாணைப்படி இத்திட்டத்தின்கீழ் அரசு ஊழியரின் குழந்தைகள் திருமணமாகும் வரை அல்லது அதிகபட்சமாக 25 வயது வரை மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்ற நிலை உள்ளது. இந் நிலையை மாற்றி அரசு ஊழியர்களின் குழந்தைகள் திருமணமாகும் வரை இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.தமிழ்நாட்டு ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட தாங்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் மேற்கண்ட கருத்துக்களை ஆய்வு செய்து, ஏற்பு செய்து உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.