tamilnadu

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சங்க தேர்தல் ஆளும் கட்சி மீண்டும் மீண்டும் அராஜகம்

சென்னை, நவ.14- திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக வீடு கட்டும் கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும் கட்சி முறைகேடாக செயல்பட்டுள்ளதைக் கண்டித்து சிஐடியு சார்பில் வியாழனன்று (நவ. 14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.கனகராஜ் கூறியதாவது:- திருவள்ளுவர் போக்குவரத்துக்கழக வீடு கட்டும் கூட்டுறவு சங்க தேர்தல் முதன் முறையாக அறிவிக்கப்பட்ட போது, சிஐடியு தரப்பில் 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற, ஆளும் கட்சிக்கு சாதகமான அதே பாணியில் இங்கும் தேர்தல் நடைபெற்றது. அதையொட்டி பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தான் விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  அந்த வழக்குகளோடு இந்த வழக்கும் இணைக்கப்பட்டன. இந்த முறைகேடுகளை விசாரிக்க 4 மண்டலக் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டன. அதையொட்டி இந்த வழக்கி னை சென்னையில் உள்ள வடக்கு மண்டலக் குழு விசாரணை நடத்தியது.  விசாரணையில் ஆளும் கட்சி சங்கத்திற்கு மட்டும் வேட்பு மனு கொடுக்கப்பட்டுள்ளது; முறையாக அனைவருக்கும் வேட்பு மனு அளித்து தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.  அதனடிப்படையில் மீண்டும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனைவருக்கும் வேட்பு மனு வழங்கப்பட்டது. 46 பேர் மனு தாக்கல் செய்து ஒப்புகை சீட்டும் வழங்கப்பட்டது. ஆனால், வேட்பு மனுவை முறையாக பரிசீலிக்காமல், ஆளும் கட்சியின் 14 பேர் வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிற மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதில் 3 பேர் திரும்பப் பெற்றனர். தேர்தல் நடத்தாமலேயே 11 பேர் கொண்டகுழு (போர்டு) அமைக்கப்பட்டது. பிறகு மீண்டும் நீதிமன்றத்திற்கு சென்று இந்த தேர்தலிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது; எனவே, ரத்து செய்ய வேண்டும் என்று கூறினோம். அதனடிப்படையில் 2 பேர் கொண்ட நீதிபதிகள் அந்த குழுவிற்கு தடை விதித்து, மீண்டும் வடக்கு மண்டலக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மீண்டும் வடக்கு மண்டல் குழுவில் ஆஜராகி தேர்தல் முறைகேடுகளை ஆதாரத்துடன் நிரூபித்தோம். அதையொட்டி இரண்டாவது முறையாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் கடந்த 8 ஆம் தேதி தேர்தல் அறிவிப்பும், 14ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை என்றும் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சிஐடியு சார்பில் 12 பேரும், தொமுச சார்பில் 3 பேரும் என ஒரு அணியாக 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் கட்சி தரப்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.  14ஆம் தேதி காலை 11 மணிக்கு தேர்தல் அதிகாரி ராஜேந்திரனிடம் சிஐடியு சார்பில் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறினோம். அனைத்தும் முறையாக நடைபெறும் என்று உத்தரவாதம் அளித்தார்.  மாலை 4 மணி வரை எந்த வேட்பாளரையும் அழைத்து பேசவில்லை. இறுதியில் காவல் துறை பாதுகாப்போடு 21 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பட்டியலை வெளியிட்டு விட்டு சென்று விட்டார். 21 பேரில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 2 குழுக்களின் 20 பேரும், சிஐடியு தரப்பில் வழக்கு தொடுத்த பொதுச் செயலாளர் ஒருவர் பெயரும் உள்ளது. வெள்ளிக்கிழமை (நவ. 15) வேட்பு மனுவை 10 பேர் திரும்பப் வாங்கி விடுவார்கள். சிஐடியு தரப்பில் திரும்பப்பெறஇடம் இல்லை. எனவே 11 பேர் கொண்ட பட்டியலை வெளியிடுவார்கள். இதன் மூலம் மீண்டும் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவையே தங்களுடைய நலன்களுக்காக வளைக்கிறார்கள். இந்த தேர்தல் முறை என்பது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம். நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார். இந்த முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திலும், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சிஐடியு துணைத் தலைவர் கண்ணன், ரைமண்ட், ரவி, முருகேசன், கோதண்டபாணி, சுதர்சிங் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.