tamilnadu

தமிழில் அரசின் கோப்புகள்: அமைச்சர் தகவல்....

சென்னை:
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக பெரும்பாக்கத்தில் தனி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் முதலமைச்சர் துவங்கி வைப்பார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுதுறை சார்பில் திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், தமிழ் வளர்ச்சி துறையை சிறப்பான துறையாக மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம் எனவும் கூறினார்.மாவட்டங்களில் உள்ள அலுவலர்களின் நடைமுறைகளிலேயே தமிழ் ஆட்சி மொழியை கொண்டு வர உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அரசின் கோப்புகள்,  மொழிப்பெயர்ப்புகள் தமிழில் வர வேண்டும் என தலைமை செயலாளர் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், தமிழ் அறிஞர்களின் சிலைகளை முழுமையாக பாதுகாக்க வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் அறக்கட்டளை அமைக்கப்பட்டதாகவும், அதன் மூலம் விருதுகள் வழங்கப்பட்டது என்றும், ஆனால் 10 ஆண்டுகளாக அந்த விருதுகள் வழங்கப்படாமல் உள்ளது என சுட்டிக்காட்டிய அவர், இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தமிழக முதலமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிப் பார்கள் என்றும், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் உயர் ஆய்வு மையம் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.

தமிழ்மொழியின் சிறப்பை வரும் தலைமுறையும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உலக தமிழ் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணம் என்றும், இது தொடர்பாக முதல்வர் முடிவு செய்வார் எனவும் கூறினார்.செம்மொழி தமிழாய்வு மையம் கொண்டு வந்த பெருமை கலைஞருக்கு தான் உள்ளதாக கூறிய அவர், தன்னாட்சி பெற்ற நிறுவனமாக தொடர்ந்து தமிழாய்வு மையம் நீடிக்கும் என்றும், பெரும்பாக்கத்தில் தனி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் முதலமைச்சர் துவங்கி வைப்பார் என்றும் தெரிவித்தார்.மறைமலை அடிகளார் மகன் ஏழ்மையில் இருப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கூறியுள்ளதாகவும், இதுத்தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் என்றும் அவர் கூறினார்.