tamilnadu

காரில் சென்று நகை பறிப்பு ஓட்டுநர் கைது

 சென்னை,செப்.14- ஆதம்பாக்கத்தில் காரில் சென்று நகை பறிப்பில் ஈடுபட்ட  ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரை சேர்ந்தவர் புஷ்பா (72). சம்பவத்தன்று அதிகாலை இவர் வீடு அருகே நடந்து சென்றார். அவ்வழியாக காரில் வந்த மர்ம நபர் ஒருவர், புஷ்பா அருகே காரை நிறுத்தி அவர் அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துவிட்டு காரில் தப்பிவிட்டார். இதேபோல் நங்கநல்லூர் பகுதியிலும் ஒரு மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது. அங்குள்ள 22-வது தெருவில் மாலதி (62) என்பவர் வீட்டு வளாகத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது காரில் வந்த நபர் காரை வீட்டு முன்பு நிறுத்தினார். பின்னர் அந்த நபர் முகவரி கேட்பது போல நடித்து மாலதி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.இந்த இரு சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினர் ராம் நகர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அவர்களை பார்த்ததும் ஒருவர் காரில் ஏறி தப்பி ஓடினார். சந்தேகமடைந்த காவலர்கள் ஜீப்பில் அவரை துரத்தினர். சினிமா பாணியில் ‘சேசிங்’ செய்த போலீசார் சுமார் 2 கி.மீ தூரத்தில் காரை மடக்கினர். பின்னர் காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அயனாவரத்தைச் சேர்ந்த பாலாஜி (50) என்பது தெரிய வந்தது. இவர் 2 மூதாட்டிகளிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர் கல்லூரி படிக்கும் தனது 2 மகள்களின் கல்விச் செலவுக்காக நகை பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.