சென்னை:
கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் உள்ளாட்சித்துறை தூய்மைப் பணியாளர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனம் ( சிஐடியு) கோரிக்கை மனு அனுப்பியுள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஆர்.கணேசன்,முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு வருமாறு:
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் தூய்மைப்பணி யாளர்கள், ஓஎச்டி ஆபரேட்டர் உள்ளிட்ட அடிப்படை ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கோவிட் தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்து வருவதை அறிவீர்கள்.ஊரக மற்றும் உள்ளாட்சித்துறையில் அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். முன்களப்பணியாளர்களான இவர்கள் குடும்பத்திற்கு கடந்த அரசு அறிவித்த நிவாரணம் எந்த விதமான இழப்பீடும் இதுவரை வழங்காதது வேதனை அளிக்கிறது.மருத்துவ, காவல்துறையினருக்கு வழங்கப்பட்டதை போல ரூ.25 லட்சம் வழங்குவதுடன் தொற்று பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும் அரசு அறிவித்த ரூ.2லட்சம் நிவாரணம் கிடைக்க வேண்டியது அவசியமாகும்.
மருத்துவ முன்களப்பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவதைப்போல உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். முன்களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் சில இடங்களில் குப்பை வண்டிகளில் பணிக்கு வரும் சூழல் உள்ளது. சிறப்பு பேருந்து அல்லது வாகன வசதி செய்துதர வேண்டும். பணித்தளத்திலிருந்து வீடுகளுக்கு சென்று வரமுடியாத சூழல் இருப்பதால் பட்டினியுடன் வேலைபார்ப்பது தவிர்க்கப்பட காலை சிற்றுண்டி, மதிய உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்.தடுப்பூசி போடாத தூய்மை பணியாளர் களுக்கு உடனடியாக தடுப்பூசி போடவேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி,கையுறை வழங்க வேண்டும். அடையாள அட்டை இல்லாத ஊழியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தினக்கூலி, ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. அரசாணை 2 டி 62 தொழிலாளர் துறை 2017 ம் ஆண்டு வெளியிட்ட உத்தரவின்படி ரூ.650 தினக்கூலி வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு கடந்த அரசு அடிப்படை ஊதியத்தை ரூ.1400 உயர்த்தி ரூ.4 ஆயிரமாக வழங்குவதாக அறிவித்து வெளியிட்ட அரசாணை குளறுபடியானதாக உள்ளதால் இதுவரை அமலாகவில்லை. ரூ.1400 ஊதிய உயர்வை அமலாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர் மற்றும் ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு மாதாமாதம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இந்த மனுவின் நகல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.