குடவாசல், ஆக.7- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறை ஊழியர் சங்கம்(சிஐடியு) ஓ.எச்.டி மற்றும் துப்புரவு பணியாளர்கள் மாவட்ட குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநில தலைவர் நா.பாலசுப்ரமணியன் சங்கத்தின் ஆக்க பணிகள் பற்றியும் கோரிக்கைகளை விளக்கியும் பேசினார். கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குநர் ஓஎச்டி ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு ஊதியம் மற்றும் நிலுவை தொகை இரண்டு ஆண்டுகளாகியும் இதுநாள் வரை வழங்கப்படவில்லை. அவற்றை உடனடி யாக வழங்க வேண்டும். ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்படும். செப்டம்பர் முதல் வாரம் திருவாரூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கோரிக்கை நிறைவேறும் வரை குடும்பத்தோடு முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டச் செயலாளர் கே.முனியாண்டி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.கலியமூர்த்தி, ஏ.பி.டி.லோகநாயகி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.