tamilnadu

img

அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க கோரிக்கை

சென்னை:
அரசுப் பள்ளியில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம்  ஊதியம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு இடைநிலைஆசிரிய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அரசாணை 177  நியமனத்தில் கீழ் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5000சம்பளத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2012 ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்கள். பல்வேறு காரணங்களினால் சிலர் பணியிலிருந்து விலகிய பிறகு தற்போது 11700 பேர் மாநிலம் முழுவதும் உடற்கல்வி ,ஓவியம், இசை, தையல் மற்றும் கணினி ஆசிரியர்களாக மாதத்திற்கு 12 நாள்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.அவர்களுக்கு தற்போதைய சம்பளமாக ரூ.7700 வழங்கப்படுகிறது ஆனால் அவர்களுக்கு பள்ளி விடுமுறைகாலமான மே மாத சம்பளம் ஆண்டு தோறும் வழங்கப்படமாட்டாது. அந்த மாதத்தில் வேறு வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார்கள். இம்முறை கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நெருக்கடியான சூழலில் சம்பளம் இன்றி தவித்து வருகின்றனர். ஏற்கனவே மாதம் 7,700 ரூபாய் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் தற்போது எவ்வித வருமானம் இன்றி குடும்பத்தை காப்பாற்ற தத்தளித்து வருகிறார்கள். பணம் ஈட்டுவதற்கு வழியும் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 11700 குடும்பங்களை காப்பாற்ற ஊரடங்கு காலமாக உள்ளதால் இம்முறை பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்க முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் பேரிடர் காலத்தில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள அரசு முற்படுகிறதோ அதைப்போல தற்காலிக  பகுதிநேர ஆசிரியர்களையும் எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை என்பதாலும் கருணை உள்ளத்தோடு  பகுதி நேர ஆசிரியர்களுக்கு  மே மாத ஊதியம்வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.