tamilnadu

img

விவசாயிகள் போராட்டம் வெற்றி: போராடுபவர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் -கே.பாலகிருஷ்ணன் பேட்டி

விவசாயிகளின் போராட்ட வெற்றி, அடுத்தடுத்து நடைபெற உள்ள மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

‘மனதின் குரல்’  நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை வரவேற்றும், விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் பட்டாசுகளை வெடித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக மோடி அரசாங்கம் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இதை எதிர்த்து கடந்தாண்டு நவ.26ந் தேதி தில்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். உலக வரலாற்றில் இல்லாத வகையில் அந்த போராட்டம் ஒராண்டு காலமாக நடந்து வருகிறது. போராட்ட களத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணமடைந்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அடிபணிந்து, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக மோடி அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது, விவசாயிகள், தொழிலாளர்கள், மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தி வரும் கார்ப்பரேட் மய கொள்கைகளுக்கு கிடைத்த மரண அடி; விவசாயிகளின் போராட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் ஆதரித்தனர். வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. அதனைத்தொடர்ந்து தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அனைத்தும் தொடக்கம் முதல் இந்த சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி போராடி வந்தன.
 

தில்லியில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் ஒருங்கிணைத்து வந்தனர். அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம், சிஐடியு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்திற்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
சட்டத்தில் உள்ள நல்ல அம்சங்களை விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியாததால் திரும்ப பெறுவதாக மோடி கூறியிருக்கிறார். கீழே வீழுந்த பின்பும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் உள்ளது. சட்டத்தில் உள்ள பாதகங்களை இப்போதும் மோடி உணராமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இந்த சட்டத்தை முன்கூட்டியே திரும்ப பெற்றிருந்தால் 700க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரை பாதுகாத்திருக்க முடியும். இந்த உயிரிழப்புகளுக்கு மோடி பொறுப்பேற்க வேண்டும். நெருக்கடிகள், அச்சுறுத்தல், கொரானா, இயற்கை இடர்பாடுகளை மீறி நெஞ்சுறுதியோடு போராடிய விவசாயிகளுக்கும், ஆதரவு தெரிவித்தவர்களை மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.
மோடிக்கு வக்காலத்து வாங்குவதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் போட்டிபோட்டு பிரச்சாரம் செய்தனர். இப்போதாவது அதிமுக படிப்பினை பெற வேண்டும். இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
 

மின்சார திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதை தடுக்க வேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான, கட்டுப்பாடான விலை தீர்மானிக்க வேண்டும், அரசு அறிவிக்கும் விலைக்கு விளைபொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களை எதிர்த்து வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்த விவசாயிகள் ஆலோசித்து வருகின்றனர்.
எல்ஐசி பங்கு விற்பனை, விமான நிலையம் விற்பனை, பணமதிப்பாக்கல் என்ற பெயரில் பொத்துறைகளை கார்ப்பரேட்களுக்கு நீண்டகால குத்தகை விடுவது போன்றவற்றை எதிர்த்து வீறுகொண்ட போராட்டங்கள் நாடு முழுவதும் வெடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “உ.பி., பீகாரில் தேர்தல் வர உள்ளது. தேர்தலுக்கு முன்பே தோற்றுவிட்டோம் என்பதை மோடி உணர்ந்து, 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுள்ளார். இந்த அறிவிப்பை வெளியிட்டதால் அந்த மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற முடியாது. விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை எனவே திரும்ப பெற்றுள்ளோம் என்றுதான் மோடி கூறியுள்ளார். சட்டத்தின் அடிப்படை அம்சங்களை இன்றைக்கும் பிரதமர் ஆதரிக்கிறார். கார்ப்பரேட் கொள்கைக்கு ஆதரவாக உள்ளார். இந்த சட்டங்களை எப்போது கொண்டுவந்தாலும், அதை நொறுக்கிற போராட்டத்திற்கு இந்த வெற்றி அடிப்படையாக இருக்கும்” என்றார்.
தோல்வி தொடங்கி விட்டது
“அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்களில் தொடர்ந்து பாஜக தோல்வி அடைந்து வருகிறது. தோல்வி முகம் தொடங்கி விட்டது. இனிமேல் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அதன் வெளிப்பாடுதான் சட்டங்களை திரும்ப பெற்றுள்ளனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்துள்ள அரசு, விவசாயிகளின் கடன்களில் ஒரு ரூபாயைக் கூட ரத்து செய்ய மறுக்கிறது. பாஜகவை விவசாயிகள் எப்படி ஆதரிப்பார்கள்? கார்ப்பரேட் முதலாளிகள் ஆதரவை தவிர, மக்கள் ஆதரவு இருக்காது. விவசாயிகளின் போராட்ட வெற்றி, அடுத்தடுத்து நடைபெற உள்ள மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்த போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்; அவற்றில் வெற்றி பெறுவோம்.” என்றும் அவர் கூறினார்.
 

இழப்பீட்டு தொகை அதிகரிக்க வேண்டும்
“தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள இழப்பீடு போதுமானதல்ல; அதை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசிடம் நிதியை பெற்று, இழப்பீட்டை ஈடு செய்யும் வகையில் வழங்க வற்புறுத்தியுள்ளோம். மழை தொடர்ந்து கொண்டே இருப்பதால், அரசு பொறுத்திருந்து கூட நிவாரணத்தை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. கூடுதலான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்” என்றார்.
 

கபடநாடகம்

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி பாஜக போராட்டம் அறிவித்துள்ளது இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “உலகத்தில் உள்ள மக்கள் விவரம் தெரியாதவர்கள் அல்ல. கலால் வரி, சர்சார்ஜ் வரியை உயர்த்தி இருப்பதான் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு அடிப்படையான காரணம். கலால் வரியில் கூட மாநில அரசுக்கு பங்கு உள்ளது. சர்சார்ஜ், செஸ் வரியில் மாநில அரசுகளுக்கு ஒரு சதவீதம் கூட பங்கு கிடையாது. கடந்த 4 வருடத்தில் 4.50 லட்சம் கோடி ரூபார் சர்சார்ஜ் வரியில் மட்டும் வசூலித்துள்ளனர். பாஜக போராட்டம் கபட நாடகம்” என்றார்.
இச்செய்தியாளர் சந்திப்பின்போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் வே.ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.