கிருஷ்ணகிரி, ஜூன் 4- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளியை தொடர்ந்து அச்சுறுத்தும் மே வண்டுகள் தாக்கத்தை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு செயல் விளக்கமளிக்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாலம் மலை கிராமத்தில் இரவு நேரங்களில் படையெடுத்து வரும் மே வண்டுகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வண்டுகளின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு தடுப்பு முறைகளுக்கான செயல் விளக்கத்தை செய்து காட்டினர். விவசாயிகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் வெட்டுக்கிளிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் காணப்பட்டது. அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் இது பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை, இது பயிர்களை தாக்காது உறுதி செய்தனர். இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்த நிலையில் தற்போது தேன்கனிக்கோட்டை மலைக் கிராம பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் மே வண்டுகள் படையெடுப்பால் விவசாயிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் மோகன்ராம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பெட்டமுகிலாலம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு நேரில் சென்று வண்டுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும், இந்த வண்டுகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார் இதைத்தொடர்ந்து இந்த வண்டுகளை கட்டுப்படுத்தி முழுமையாக அழிப்பதற்கு கோடை உழவு விளக்குப் பொறி அமைத்தல், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விளக்கங்களை நேரில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் செய்து காட்டி விளக்கமளித்தனர். இதுகுறித்து மோகன்ராம் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வண்டுகள் வழக்கமாக இரவு நேரங்களில் மட்டுமே மே மற்றும் ஜூன் மாதங்களில் வரக்கூடியது என்றும் சுமார் 70 முதல் 100 முட்டைகள் வரை இடும் என்றார். இதன் இளம் பருவத்து குழுவானது மண்ணில் வாழும் தன்மை கொண்டது என்றும், பிறகு பருவமடைந்து வண்டாக மாறி இலைகளை உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்தார் மேலும் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் எளிதான செயல் என்றும், இதனால் விவசாயிகள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் கூறிய அவர் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வழி முறைகளை செயல்படுத்தி மிகவும் எளிதாக முற்றிலுமாக இந்த வண்டுகளை அழித்து விடலாம் எனவும் தெரிவித்தார்.