tamilnadu

img

கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் விலக்கு தேவை: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை:
கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இறுதிப் பருவத் தேர்வு தவிர மற்ற பருவப் பாடங்களின் தேர்வுக் கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணாக்கர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்” என்று 26.8.2020 அன்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும், அது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும் பலனளிப்பதாக இல்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.பருவத் தேர்வுகளுக்கான தேர்வுக்கட்டணம் மார்ச் மாதத்திற்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில்தான் ஊரடங்கு மார்ச் 24 ஆம் தேதியே அறிவிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாகக் கல்லூரிகள் மூடப்பட்டன. ஏழை - எளிய, நடுத்தர மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கே கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தங்கள் பிள்ளைகளின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்தனர்.

பருவத் தேர்வுக்குக் கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களை கண்டுகொள்ளாமல் இப்படியொரு பாரபட்சமான முடிவினை எடுத்து அறிவித்திருக்கிறார் முதல்வர். இதனால் பல கல்லூரிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.ஆகவே, “கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும்” என்று முதலமைச்சர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.