விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் கிராமத்தில் யாழினி நகரில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்கக்கோரி அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விக்னேஷ் ஆஜராகி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து விவசாய நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு சில்லறை மது விற்பனை விதிகளின்படி டாஸ்மாக் நிர்வாகம் மதுபான கடைகளை திறக்கலாம். அதே நேரத்தில் விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது. இந்த வழக்கில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள விவசாய நிலத்தில் உள்ள கடையை அகற்ற வேண்டும். சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் தான் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.