tamilnadu

சென்னை விமான நிலைய பெயரை முறையாக அறிவித்திட திமுக கோரிக்கை

சென்னை:
‘அண்ணா சர்வதேச விமான நிலையம்’, ‘காமராஜர் உள்ளூர் விமான நிலையம்’ ஆகிய விமான நிலையத்தின் பெயர்களை முறையாக அறிவித்திட வலியுறுத்தி, விமானப் போக்குவரத்து இணை அமைச்சருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை சர்வதேச - உள்ளூர் விமான நிலையங்களுக்கு 1989ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ‘அண்ணா சர்வதேச விமான நிலையம்’, ‘காமராஜர் உள்ளூர் விமான நிலையம்’ ஆகிய பெயர்கள் சூட்டப் பட்டன.இந்நிலையில், இந்தப் பெயர்களை முறையாக அறிவிக்க வலியுறுத்தி  மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினரும் கழக அமைப்புச் செயலருமான ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.அதில், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை தரும்போதும், புறப்படும்போதும் தவறான வகையில் செய்யப்படும் அறிவிப்புகள் குறித்த விவரத்தினை தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.1989ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, சென்னை உள்ளூர் விமான நிலையத்தை ’காமராஜர் விமான நிலையம்’ என்றும், பன்னாட்டு முனையத்தை ’அண்ணா சர்வதேச விமான நிலையம்’ என்றும் அறிவித்தது பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள்.அவ்வாறு பெயர் சூட்டப்பட்ட பின்னரும், பெரும்பாலும் சென்னை விமான நிலையம் என்றும், சென்னை சர்வதேச விமான நிலையம் என்றும் தற்போது வரை அறிவிக்கப்பட்டு வருகிறது.இத்தகைய சூழ்நிலையில், சென்னை விமான நிலையப் பெயர்கள் குறித்த அறிவிப்புகளை முறைப்படுத்தி வெளியிடுமாறும், இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய நெறிமுறைகளை வழங்குமாறும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.