சென்னை:
அரியர் தேர்வை ரத்து செய்த முடிவு தவறானது என்று ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்) தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், அரியர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு மாணவர்கள் வரவேற்பும், கல்வியாளர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.அரியர் தேர்வு ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், ஏஐசிடிஇ, யுஜிசி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதனிடையே, அரியர் மாணவர் களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவும், அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் கூறி வந்தனர்.இது மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே என்பவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்து முடிவு தவறானது. அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கியது குறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தனக்கு எழுதிய கடிதத்துக்குப் பதில் கடிதம் எழுதும்போது இந்தக் கருத்தை நான் தெரிவித்துள்ளேன். அரியர் தேர்வு ரத்து தொடர்பாக ஏஐசிடிஇ தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.