சென்னை, ஏப்.16 -தேர்தல் நடைபெறும் நாளில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 ஆம் (வியாழன்) தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மக்கள் பணிச் சுமையின்றி வாக்களிக்கும் வகையில் ஏப்ரல் 18-ஆம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் நடக்கும் ஏப்ரல் 18-ல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 18 அன்று ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நல ஆணையர் கூறியுள்ளார்.