தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை இம்மாதம் இறுதிவரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை - வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நவ.30 ஆம் தேதிவரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதுடன், கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் சானிட்டைசர் வைக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பொதுமக்கள் வரிசையில் நிற்கும்போது இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தவறாது 2வது தவணை தடுப்பூசியை உரிய காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும். வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படுவதோடு வீடுவீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கிக் கொள்ளவும் நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டு கொண்டுள்ளார். மழை காலங்களில் தண்ணீர் தொடர்பான தொற்று நோய்கள் எளிதில் பரவும் என்பதால் பொதுமக்கள் காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.