சென்னை:
சாதி ஆணவத்துடன் கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழவைத்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தன்னுடைய சொத்து விவரங்களை சரிபார்ப்ப தற்காக வந்த கோபால்சாமி, அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் முத்துசாமியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். முத்துசாமியை சாதி ஆதிக்க மனோ பாவத்துடன் எச்சரித்தது மட்டுமல்லாமல், விஏஓ அலுவலகத்திலேயே தன்னுடைய காலில் விழுந்து மன்னிப்பும் கேட்கச் சொல்லியுள்ளார்.
பட்டியல் சமூகத்தை சார்ந்த அரசு ஊழியர் ஒருவரை அரசு அலுவலகத்திலேயே காலில் விழ வைத்து மன்னிப்புக் கேட்க வைத்த இத்தகைய இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். நாம் நாகரீகமான சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்கிற சந்தேகத்தை இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. இக்கொடுமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. காலில் விழவைத்த கோபால்சாமி மீது நான்கு பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதோடு, சாதி ஆதிக்க மனோபாவத்துடன் நடந்து கொண்ட கோபால்சாமிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனவும் இப்படிப்பட்ட வர்களை பிணையில் வெளிவரமுடியாத வழக்குகளின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்துகிறது.
சாதி ஆணவத்தின் காரணமாக நிகழும்கௌரவக் கொலைகளும், அவர்களுக்குஉரிய நிலங்கள் பறிக்கப்படுவதும், அவர் களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதுமான கொடுமை கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இனிமேல் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழா வண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 பிரிவுகளில் வழக்கு பதிவு
முன்னதாக இப்பிரச்சனை பற்றி தகவல் அறிந்தவுடன் தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணி, தபெதிக, வாலிபர் சங்கம்உள்ளிட்ட அமைப்புகள் உடனடியாக போராட்டத்தில் இறங்கினர். இதனைதொடர்ந்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் இரு தரப்பினரிடம் விசாரணை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் சனிக்கிழமை மாலை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப் பித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டதில், கோபால்சாமி அரசுஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, முத்துசாமியை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்தது உறுதியானது. இதனையடுத்து கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக்கு ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அன்னூர் காவல் நிலையத்தில் ஒட்டர் பாளையம் விஏஓ கலைச்செல்வி மற்றும் அலுவலக உதவியாளர் முத்துசாமி ஆகியோர் புகார் அளித்தனர். விஏஒ கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒரு வழக்கும், உதவியாளர் முத்துச்சாமி அளித்த புகாரின் பேரில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காகவும், விஏஓ அலுவலக உதவியாளர் முத்துசாமியை சாதியை சொல்லித் திட்டியதற்காகவும், அவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததற்காகவும் வன்கொடுமைத் தடுப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கோபால்சாமி மீது அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து கோபால்சாமியை கைது செய்வதற்கான நடவடிக்கையை துவக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.