கொடிக் கம்பங்களை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிபிஎம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு கோடை விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு:
அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வைத்திருக்கின்ற கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென கடந்த 27.1.2025 அன்று மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி இளந்திரையன் அவர்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 21.04.2025 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி, உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளை பிரதிபலிக்கின்ற அடையாள சின்னமாகும். அதை எடுக்க சொல்வது ஜனநாயக மீறலாகும் என்றும், கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு போடுவதற்கு முன் எங்கள் தரப்பு நியாயத்தை கேட்கவில்லை என்றும், எனவே மேற்கண்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், இரண்டு மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஏற்கனவே ஒருவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்ததை எதிர்த்தும் சிபிஐ(எம்) சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் இன்று (25.04.2025) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாண்பமை நீதிபதிகள் நிஷாபானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜரானார். வழக்கு விசாரணை கோடை விடுமுறை காலத்திற்கு பிறகு விசாரிக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிபிஎம் தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி மற்றும் ஜூனியர் வழக்கறிஞர்கள் எஸ்.அருண்குமார், எஸ்.சிவசேகர், எம்.கிஷோர், ஜே.கணேஷ், ஆர்.ஜோஸ்வா, கே.மும்தா, ஆர்.சிவபாரதி, கே.சுந்தரராஜ், ஆர்.இளவரசன் ஆகியோர் ஆஜராகினர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.