சென்னை:
பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் செவ்வாயன்று (ஆக.11) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கி வருகிறார்.
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, தமிழகம், தில்லியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது தில்லி கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.ஆனால் மகாராஷ்டிரா, தமிழகத்தில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 8 மாநில முதல்வர்களுடன் செவ்வாயன்று காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.தமிழகம் தவிர ஆந்திரம், பீகார், குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தெலுங் கானா உள்ளிட்ட மாநில முதல் வர்களும் இந்த ஆலோசனையில் கலந்து கொள்கிறார்கள்.இந்த கூட்டத்தில் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.